இணையத்தில் புதிய திரைப்படங்களை பதிவேற்றிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது: மதுரையைச் சேர்ந்தவர் திருவனந்தபுரத்தில் சிக்கினார்

மதுரை: மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் பதிவேற்றர் கேரளாவில் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயன் திரைப்படத்தை கேரள திரையரங்கில் பதிவு செய்து கொண்டிருந்த போது கையும் களவுமாக இவர் போலீசில் சிக்கினார். மதுரையை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். புதிய திரைப்படங்களை இணையங்களில் சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.

எந்த மொழியில் திரைப்படம் வந்தாலும், ரிலீஸ் செய்த அன்றே இணையத்தில் பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் தளம் திரைத்துறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இவ்வகையில் கடந்த மே மாதம் நடிகர் பிரித்திவிராஜ்நடிப்பிலான ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகி, முதல் நாளிலேயே இந்த படம் தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளரும், பிரித்திவிராஜின் மனைவியுமான சுப்ரியா மேனன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் இதனை பதிவு செய்தவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் ஒரு தியேட்டரில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள ராயன் திரைப்படத்தை சிறிய நவீன கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்த ஸ்டீபன்ராஜை, காக்கநாடு சைபர் கிரைம் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திரையரங்குகளின் இருக்கைகளில் சிறிய அளவிலான நவீன கேமராக்களை வைத்து முழு படத்தையும் ரெக்கார்டு செய்து வந்ததும், இணையத்தில் படங்களை முதல் நாளிலேயே பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் கமிஷனாக ஸ்டீபன்ராஜ் பெற்றதும் தெரிந்தது.

12 பேர் இணைந்து இந்த பதிவு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி புதிய திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்ததும் விசாரணையில் தெரிந்தது. ஸ்டீபன் ராஜூடன் தொடர்பில் இருந்த மேலும் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். ஸ்டீபன் ராஜ் உட்பட இவரையும் கொச்சிக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.