எங்கள் மண்ணிலேயே இறந்து விடுகிறோம்.. வடக்கோ, தெற்கோ எங்கு சென்றாலும் கொல்ல தான் போகிறார்கள்.. காசா மக்கள் கண்ணீர்..!!

காசா: இஸ்ரேல் அரசு விதித்திருந்த 24 மணிநேர காலக்கெடு முடிவடைந்து விட்டது. 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்களை வடக்கு பகுதியில் இருந்து வெளியேற சொன்னது இஸ்ரேல் அரசு. 24 மணி நேரத்திற்கு பின்னர் அந்த பகுதிகளில் தரைவழி தாக்குதல் நடத்துவதே இஸ்ரேல் அரசின் திட்டம். உயிரை காப்பாற்றி கொள்ள விரும்புவார்கள் தெற்கு பக்கம் சென்று விடுங்கள் என அறிவித்தார் இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவவ் காலண்ட்.

இஸ்ரேல் அரசு விதித்திருந்த காலக்கெடுவுக்குள் பாதிக்கப்பட்ட மக்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றுவது இயலாத காரியம் என ஐ.நா. அறிவித்தது. ஐ.நா. அதிகாரியான மார்ட்டின் ஏர்ட்ல் காசாவில் இருக்கக்கூடிய மக்களின் கயிறு இறுகிக் கொண்டு இருக்கிறது. மக்கள் அதிகம் வாழக்கூடிய போர் பகுதியில் இருந்து எப்படி 11 லட்ச மக்களை 24 மணிநேரத்தில் வெளியேற்ற முடியும் என வெளிப்படையாகவே அறிவித்தார்.

காசாவில் வாழும் மன்சூர் சவ்மன் அல்ஜீரா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நாங்கள் நம்பிக்கையற்று போய் விட்டோம். காசாவை பற்றியும், இங்கு இருக்கும் மக்களை பற்றியும் யாருக்கும் அக்கறை இல்லை. நாங்கள் இறக்க போகிறோம் என்பது முடிவாகி விட்டதால் வீட்டிலேயே இறந்து கொள்கிறோம். வடக்கோ, தெற்கோ எங்கு சென்றாலும் கொல்லப்படத்தானே போகிறோம். எங்கள் உரிமைக்காக போராடியபடி நெஞ்சை உயர்த்தி எங்கள் நம்பிக்கையுடன் எங்கள் மண்ணிலேயே இறந்து விடுகிறோம்’. என பேட்டியளித்திருக்கிறார்.

காசாவில் வாழும் ஸ்காட்லாந்து செவிலியரான எலிசபத் எல் நக்லா இது குறித்து கூறுகையில்; இதுவே எனது கடைசி விடியோவாக இருக்கும். நாங்கள் இருக்கும் மருத்துவமனை நோக்கி பல்வேறு இடங்களில் இருந்து காசா மக்கள் வருகிறார்கள். 10 லட்ச மக்கள் இங்கு இருக்கிறார்கள். உணவு, தண்ணீர் என எதுவும் இல்லை. நாங்கள் செல்லும் இடம் எல்லாம் குண்டுகள் விழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த மருத்துவமனையில் இருக்கும் யாரையும் எங்களால் எங்கேயும் கூட்டி செல்ல முடியாது. மனிதம் எங்கே இருக்கிறது?. உலகில் வாழும் மக்கள் எப்படி இதை பொறுத்து கொண்டு இருக்கிறார்கள்?. கடவுள் துணை இருப்பார் என்று நம்புகிறேன். என கண்ணீருடன் விடியோவை வெளியிட்டிருக்கிறார்.

Related posts

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு

நில மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்!!