வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது: சில தினங்களுக்கு முன் வயநாடு சென்று நிலச்சரிவால் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். அங்கு சோகம் நிறைந்த வலியையும், துன்பத்தையும் கண்டேன். சில குடும்பங்களில் ஒரு குழந்தை அல்லது பெரியவரை தவிர குடும்பத்தினர் அனைவரும் இறந்து விட்டனர். ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 400ஐ தாண்டலாம்.

இந்த துயரமான தருணத்தில் வயநாட்டுக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவிய மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், விமானப்படை, கப்பற்படை, தீயணைப்புத்துறை மற்றும் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுக்கு பாராட்டுகள். வெவ்வேறு சித்தாந்தங்களை பொருட்படுத்தாமல் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து உதவுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வயநாடு நிலச்சரிவு ஒரு மிகப்பெரிய சோகம். வயநாட்டில் பேரழிவை தாங்கும் உள்கட்டமைப்புகளை உருவாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகவும் ஒன்றிய அரசின் இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும். அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

Related posts

சிவகங்கை மாவட்டத்தில் 4,600 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு

மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் மசாலா பொருட்கள் காலை உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி அசத்தல்

வேட்டவலம் அரசுப்பள்ளி மாணவிகள் குரு வட்ட தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்