வயநாடு நிலச்சரிவு; முன்னோர்கள் பின்பற்றிய மொய் விருந்து: திண்டுக்கல்லில் நடத்த சுவாரசியம்!

திண்டுக்கல்: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டுவதற்காக திண்டுக்கல்லில் மொய் விருந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு என்னும் இயற்கை பேரழிவில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகள், உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தவித்து வருகின்றனர். அப்படி உயிர்பிழைத்த மக்களின் வாழ்வாதாரத்தை காக்க பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற மொய் விருந்து நிகழ்ச்சில் திண்டுக்கல் ஹோட்டல் சங்கத்தினர் நிதி திரட்டியுள்ளனர். திண்டுக்கல்லில் உள்ள முஜிப் பிரியாணி கடை உரிமையாளர் முஜிபுர் ரகுமான், வயநாடு மக்களுக்கு உதவும் நோக்கில் ஹோட்டல் அசோசியேஷன், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து சுய விருந்து என்னும் மொய்விருந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். மொய் விருந்தை நடத்துவதாக வெளியான அறிவிப்பு சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகம் பரவியது. மொய் விருந்து என்றால் சாப்பிடும் உணவுக்கு பில் வழங்கப்படாது; மாறாக தாங்கள் விரும்பிய தொகையை அவர்கள் வழங்கலாம்.

இதனையடுத்து திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டில் உள்ள முஜிபுர் ரகுமான் உணவகத்தில் மொய் விருந்து நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மொய் விருந்தில் பலரும் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கு உண்டான தொகையை விட அதிக தொகையை இலைக்கு அடியில் வைத்துச்சென்றனர். சிலர் செக் ஆகவும் வழங்கியிருந்தனர். அத்துடன் குறைந்த தொகை கொண்டு வந்தவர்கள் அதை அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்தினர். சிறுவர்களும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் காசுகளை வயநாடு மக்களுக்காக வழங்கினர்.

இது தொடர்பாக முஜிபுர்ரகுமான் கூறுகையில்; இயற்கையின் சீற்றத்திலுருந்து யாரும் தப்ப முடியாது. வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முஜிப் பிரியாணி, ஹோட்டல் அசோசொயேஷன், ரோட்டரி சங்கம் இணைந்து மொய் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வயநாடு மக்களுக்கு நான் ரூ.50 ஆயிரமோ, ஒரு லட்சமோ தனியாக நிவாரணமாக தந்து உதவலாம்.

ஆனால் திண்டுக்கல் மக்களுடன் இணைந்து பங்களிப்பை செய்யவேண்டும் என்ற நோக்கில் தான் முன்னோர்கள் பின்பற்றிய, தற்போது மக்களால் மறந்துபோன பண்டைய முறையான மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். இதில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். மொய்விருந்தில் வந்த தொகை அனைத்தும் வயநாடு மக்களுக்கு நிவாரணத் தொகையாக சென்றடையும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

“தமிழர்களுக்கு எதிரான விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி பேரணி

இலவச மனைப்பட்டா வழங்காததால் மக்கள் ஆவேசம் குடியுரிமை வேண்டாம் கைலாசாவுக்கு அனுப்பி விடுங்கள்