வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரியைச் சேர்ந்த கல்யாணகுமாரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரியைச் சேர்ந்த கல்யாணகுமாரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றிவந்த நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு 1 கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திரு.கல்யாணகுமார் (வயது 52) த/பெ. முருகையா என்பவர் நேற்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு.கல்யாணகுமார் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காலம்சென்ற திரு.கல்யாணகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த கல்யாணகுமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இவர் சூரல்மலையில் உள்ள சிவன் கோவிலில் தங்கி அர்ச்சகராக வேலை செய்து வந்துள்ளார். நிலச்சரிவில் சூரல்மலையில் உள்ள சிவன் கோவிலும் மண்ணில் புதைந்தது. பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த கல்யாணகுமாரின் உடல் மீட்கப்பட்டு அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்