வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜ கேரள மாநில தலைவர்

திருவனந்தபுரம்: கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேசிய தலைவரான டி. ராஜாவின் மனைவி ஆனி ராஜா நிறுத்தப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நேற்று முன்தினம் மாலை வரை யார்? என தெரியாமல் இருந்தது. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 16ல் பாஜவும், மீதமுள்ள 4 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான பிடிஜேஎஸ் கட்சியும் போட்டியிடுகிறது. பாஜ தங்களது 12 வேட்பாளர்களை மட்டுமே முதல் கட்டமாக அறிவித்து இருந்தது. வயநாடு, எர்ணாகுளம், ஆலத்தூர், கொல்லம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி வயநாட்டில் மாநில தலைவர் சுரேந்திரனும், கொல்லத்தில் பிரபல நடிகர் கிருஷ்ணகுமாரும், எர்ணாகுளத்தில் கே.எஸ். ராதாகிருஷ்ணனும், ஆலத்தூரில் சரசுவும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சுரேந்திரன் கூறியிருந்தார். ஆனால் வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து முக்கிய தலைவரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே மாநிலத் தலைவரான சுரேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.நாடாளுமன்றத் தேர்தலில் இவர் காசர்கோடு தொகுதியிலிருந்து 2 முறையும், பத்தனம்திட்டா தொகுதியில் கடந்த முறையும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சட்டப்பேரவை தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டு 2 முறையும் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு