தண்ணீர் அரசியல் ஏன்?

காவிரி ஒழுங்காற்று குழுவானது தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மேலும், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கருத்தில் கொண்டு, கடந்த 12ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், வழக்கம்போல இந்த விஷயத்தில் திறக்க மாட்டேன் என கர்நாடக அரசு முரண்டு பிடித்து வருகிறது. கர்நாடக அரசின் பிடிவாத நிலை தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 20 மாவட்டங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறும் சூழலில், விவசாயிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளில் நீர் இருப்பு 76 டிஎம்சியாக உள்ளது. தேவைக்கு மிதமாக தண்ணீர் இருக்கும் சூழலில் கர்நாடக அரசு தண்ணீரை திறக்க மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மேட்டூர் அணையின் நீர்மட்டமும் சரிவடைந்த சூழலில்தான், தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை நேற்று முன்தினம் கூட்டினார்.

அனைத்துக்கட்சியினர் தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து, பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது’’ என கூறியுள்ளார்.
இதுபோலவே, பெரியாறு அணை விவகாரத்திலும் கேரள அரசு தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறது. பெரியாறு அணை வலுவிழந்து காணப்படுகிறது. இடியும் நிலை உள்ளது.

அப்படி இடிந்தால் இடுக்கி அணைக்கு பாதிப்பு வரும். கேரளாவின் பெரும்பாலான நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது என தொடர்ந்து கதை கட்டி வருகிறது. நீர்மட்டத்தையும் உயர்த்துவதற்கு தொடர் ஆட்சேபம் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘‘பெரியாறு அணை வலுவாக உள்ளது. தாராளமாக 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம்’’ என தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அணையை அவ்வப்போது கண்காணிக்க மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது.

இக்குழுவுக்கு துணையாக துணைக்குழுவும் செயல்படுகிறது. இக்குழுவினர் அணையை அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்கின்றனர். ஆனாலும், ஒன்றிய அரசின் துணையோடு பெரியாறு அணை பகுதியில், புதிய அணை கட்டியே தீருவோமென கூறி வருகிறது கேரள அரசு. ஏற்கனவே, இதுதொடர்பாக ஆய்வுகள் செய்து புதிய அணைக்கான வாய்ப்பில்லை என தெரிந்த பின்பும், தொடர்ந்து இந்த பிரச்னையை எழுப்புவதற்கு அரசியலை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

தற்போது, புதிய அணை விவகாரத்தில், தமிழகத்தின் ஒப்புதலின்றி நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற முட்டுக்கட்டையால் கேரள அரசு, அடக்கி வாசித்தாலும் மீண்டும், மீண்டும் இப்பிரச்னையை எழுப்பி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. புதிய அணை கட்டினால் 5 மாவட்டங்களில் பாசனம், குடிநீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என தென்மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர். அண்டை மாநிலங்கள் தண்ணீர் விவகாரத்தில் சண்டை மாநிலங்களாக இருப்பது சரியல்ல.. இனியாவது தண்ணீர் அரசியலை தள்ளி விட்டு, தேசிய நலனில் பிற மாநிலங்கள் அக்கறை காட்டுவதே எதிர்காலத்திற்கு சிறந்தது.

Related posts

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது