ஒரு குவளை நீர் கொடுங்கள் சொல்கிறார் தேவதைகளின் தேவதை!

தெருவோர நாய்களும், பூனைகளும், பறவைகளும் தான் நம்மைச் சுற்றியிருக்கும் வாழும் தேவதைகள். அவைகளுக்கே தேவதையாக மாறியிருக்கிறார் ஒரு தாயுள்ளம் கொண்ட பெண். ஒரு பூனை அல்லது நாய் செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கே ஏகப்பட்ட பொறுப்புகள், கடமைகள், தினந்தோறுமான வேலைகள் அவற்றிற்கு உணவு, சுத்தம், காலை மாலை கடன்கள் என பல வேலைகளையும் தவறாது செய்து முடிக்க வேண்டி இருக்கும். எனவேதான் இப்போதெல்லாம் ஒரு செல்லப்பிராணியை வாங்கி அல்லது தத்தெடுத்து வளர்ப்பதற்கு முன்பே நம்மை நாமே மனதளவிலும் உடலளவிலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டி பலவிதமான செல்லப் பிராணிகள் வளர்ப்பு பயிற்சி முகாம்கள், பெட் கிளினிக்குகள் என பல வந்துவிட்டன. ஆனால் நூற்றி ஐம்பதுக்கும் மேலான தெருநாய்கள், எழுபதுக்கும் மேற்பட்ட பூனைகள், 500க்கும் மேற்பட்ட புறா உள்ளிட்ட பறவைகள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அவைகளுக்கு உணவுகள், தங்குமிடம், சரியான நேரத்தில் தடுப்பூசிகள், நோய்த் தடுப்பு மருந்துகள், மழை நேரங்களில் அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என அனைத்தும் வழங்கி ஒரு தாயாக மாறி கவனித்து வருகிறார் சென்னையை சேர்ந்த சுதா சந்திரசேகர். எப்படி சாத்தியம்? இவ்வளவு தெருவோர விலங்குகளையும் பராமரிப்பதில் என்னென்ன சவால்கள் உள்ளன பேசத்தொடங்கினார் சுதா.

‘இது அத்தனையும் ஆரம்பித்தது டாஷா (நாய்) மூலமாதான் . ஒருமுறை சென்னை ஹைவேயில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு நாய் அடிபட்டு வேதனையில் துடிச்சுக்கிட்டு இருந்தது. அதனைக் கொண்டு வந்து போதிய மருத்துவ சிகிச்சைகள் கொடுத்த போது அந்த நாய் விபத்துக்குள்ளானது மட்டுமின்றி அதன் கர்ப்பப்பையில் ஆசிட் தாக்குதலும் நடந்திருப்பது தெரியவந்தது. ஏராளமான சிகிச்சைகள் பராமரிப்புகள் அதையும் தாண்டி உறுப்புகள் செயலிழப்பு காரணமா ஒரு வருடத்தில் டாஷா இறந்துட்டா. இப்படி எத்தனையோ சாலையோர நாய்களும், பூனைகளும் தகுந்த உணவும் தங்கும் வசதியும் இல்லாமல் போராடி வாழ்ந்துகிட்டு இருக்கு. நாம இருக்கிற இதே பூமியில் அத்தனை உரிமைகளும் பெற்று வாழக்கூடிய தகுதி அவைகளுக்கும் உண்டு. ஆனால் நாம் அவைகளை கண்டுகொள்வது கூட கிடையாது. தனக்கு என்ன வேண்டும் என கேட்டு பெறக் கூட முடியாத வாயில்லா ஜீவன்கள் இவைகளை பராமரிக்கவும் பாதுகாக்கவும் என்னால் என்ன செய்ய முடியும் என யோசித்தேன். அப்படி உருவானது தான் எங்களுடைய ‘சான்ஸ் விலங்குகள் தொண்டு நிறுவனம்’ என்று சொன்ன சுதா தன்னைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

‘பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை தான். அப்பா தாத்தா எல்லோருமே ஸ்கூல் வைத்து நடத்தி வரும் கல்விக் குடும்பம். ஒருவேளை எனக்கு அறிவியல் படிப்பு தலையில் ஏறி இருந்தால் நிச்சயம் இலவசமாக கால்நடை மருத்துவமனை வைத்திருப்பேன். ஆனால் எனக்கு ஆர்ட்ஸ் படிப்புதான் வந்தது. அதனால் பிபிஏ படித்து முடித்தேன். எனக்கு இந்த ஆலோசனையைக் கொடுத்தவர் எனது கணவர். சின்ன வயதில் இருந்து விலங்குகள் மேலே ஆர்வம் அதிகம். பெரும்பாலும் மனுஷங்களை விடவும் செல்லப்பிராணிகள் மேலே அக்கறை அதிகம் காட்டுவேன் அவங்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் முதலில் ஓடுவதும் உண்டு. எனக்கு இரண்டு மகன்கள் சஞ்சய் மற்றும் சஞ்சித். ரெண்டு பேரின் பெயருக்கும் பொதுவாக சான்ஸ் என பெயர் வைத்தோம். சான்ஸ் முக்கிய வேலை விலங்குகள் வாழ்வாதாரம் தான். மேலும் பெற்றோர் இல்லாத, வீடுகள் இல்லாத விலங்குகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கிறது. ஏராளமான தெருவோர நாய்கள், பூனைகளை ஆர்வமுள்ள விலங்கு ஆர்வலர்களுக்கு தத்து கொடுக்கிற வேலைகளையும் செய்து கொடுக்கிறோம். இதைத் தாண்டி ஒரு சிலர் வீட்டுச் செல்லப் பிராணிகளை சில தவிர்க்க முடியாத காரணத்தால் விட்டுச்செல்ல வேண்டிய சூழல் உண்டாகும். உதாரணத்துக்கு வெளிநாடு பயணம், உடல்நிலைப் பிரச்னை காரணமாக செல்லப் பிராணிகளை யாருக்காவது கொடுக்க நினைப்பார்கள். அப்படிப்பட்ட செல்லப்பிராணிகளுக்கும் புது உரிமையாளர்களை உருவாக்குவது போன்ற பல வேலைகளை செய்வோம் ‘என்னும் சுதா ஒரு கோடி மரம் என்னும் குறிக்கோளுடன் செயல்படுகிறார்.

‘ இவ்வளவு விலங்குகள், பறவைகள் எல்லாம் வாழ்வாதாரம் இல்லாம போனதுக்கு முதல் காரணம் மரங்களை அழிச்சி அங்கே நகரங்கள் உருவாக்கினதால்தான். நகரமயமாக்கல் காரணமாகவே தினம் சுமார் 100 மரங்களை ஒவ்வொரு நகரமும் இழந்திட்டு இருக்கு. அதனால்தான் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் மரங்களை நடுகிறோம். இதுவரை 4000க்கும் மேற்பட்ட மரங்கள்நட்டு இருக்கோம். விரைவில் ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் செயல் படுறோம்’ இதற்கு ஒரு பைசா கூட யாரிடமும் வாங்குவதில்லை எனினும் ஏராளமான சவால்கள் பிரச்னைகள் வருகின்றன என்கிறார் சுதா. ‘தினமும் காலை, மாலை ரெண்டு வேளையும் பறவைகளுக்கு சாப்பாடு வைப்பேன். 500க்கும் மேலான புறாக்கள் வந்து சாப்பிடும். சில நேரம் காகம், குருவி, உள்ளிட்ட மற்ற பறவைகளும் கூட வரும். இதனால் குப்பையாகுது என்கிற அக்கம்,பக்கத்து வீட்டார் கேள்விகள் வந்துச்சு. நாய், பூனைகளின் கூட்டமும் இடையூறாக இருக்கிறதா புகார் வந்தது. ஆனால் என் கிட்ட சாப்பிட வருகிற விலங்குகள் எக்காலத்திலும் கத்தி, அடுத்தவங்களுக்கு இடையூறு கொடுக்காது. ஆனால் அக்கம் பக்கத்து வீட்டாரை விட வெளியிலிருந்து வந்த பிரச்னைகள்தான் அதிகம். குறிப்பா ஒருசில பணம் சார்ந்து நடத்தப்படும் தொண்டு நிறுவனங்கள்.

எப்படி வருமானமே இல்லாமல், மற்றவர்கள் நிதி இல்லாம இதை நடத்துறீங்க, என்ன பின்னணி வருமானம், இல்லை விலங்குகளை வைத்து வேறு ஏதாவது சட்டத்துக்கு எதிராக வேலை செய்யறீங்களா என்கிற பிரச்னை எல்லாம் வந்தது. அதாவது நல்லது செய்தாலும் அதிலேயும் நமக்கு லாபம் இல்லாம செய்யக்கூடாது. எனக்கும் உதவும் பல நல்ல உள்ளங்கள் இருக்காங்க. ஆனால் யாரிடமும் பணம் வாங்குறதில்லை. உணவா கொடுங்க, உங்களால் என்ன உணவு முடியுதோ அதைக் கொடுங்கன்னு வாங்கிப்பேன்’ என்னும் சுதா இலவசமாக குடிநீர் தொட்டிகளும் கொடுக்கிறார். ‘கான்கிரீட் குடிநீர் பவுல்களும் விரும்பிக் கேட்கும் பலருக்கும் கொடுக்கிறோம். மேலும் பார்க், அரசு அலுவலகக் கட்டிடங்கள் வாயில்கள், முதலமைச்சர் இருக்கும் வீதிகள், கலெக்டர் அலுவலகங்கள், இப்படி பல பொது இடங்களிலும் கூட இந்த குடிதண்ணீர் பவுல்கள் தெருவோர நாய், பூனைகளுக்கு வைக்கிறோம். எங்களுக்கு எந்த வாலண்டியர்களும் கிடையாது. நானும் என் குடும்பம் மட்டுமே எல்லா வேலைகளும் செய்கிறோம். ஏனெனில் நாம காசு வாங்கறதில்லை, ஆனால் அதையே மத்தவங்க கிட்ட எதிர்பார்க்க முடியாது’ வாயில்லா ஜீவன்களுக்கு மனிதர்கள் என்ன செய்ய வேண்டும். ‘தினமும் ஒரு சிறு கிண்ணத்தில் உங்க வீட்டருகே தண்ணீர் வைத்தாலே போதும். கொஞ்சம் உணவு ஒரு நாய், பூனைக்கு வையுங்க போதும். எதையும் எதிர்பார்க்காமல் நாம செய்கிற நல்ல செயல்களுக்கு எப்போதும் பலன் தேடி வரும். அப்படி ஒருசில விருதுகளும் அங்கீகாரமும் கூட எனக்குக் கிடைத்தது. பெருந்தலைவர் காமராஜர் விருது, வுமன் ஃபேம் விருது, கோல்டன் ஐகான் 2023, வள்ளலார் விருது, கலாம் விருது, சேவா ரத்னா விருது உள்ளிட்ட விருதுகளும் கிடைச்சிருக்கு’ தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் சுதா சந்திரசேகர்.
– ஷாலினி நியூட்டன்

Related posts

பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது