பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை

*விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

பெரம்பலூர் : நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் உறுதியளித்தார்.பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை உடனுக்குடன் விளக்கம் அளிக்க அறிவுறுத்திய கலெக்டர் அனைத்து கோரிக்கைகளின் மீதும் தேவையான நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

பின்னர், கலெக்டர் கூறியதாவது: இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த ஒவ்வொரு கோரிக்கையின் மீதும் தனிக் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு அரசின் சார்பில் பல்வேறுதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தோட்டக்கலைத் துறை மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பரப்பு அதிகரித்தல், சிப்பம் கட்டும் அறை பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித்தோட்ட காய்கறி, பழச்செடி தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம்-தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக்கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மலையாளப்பட்டியில் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்களை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கிரேஸ் பச்சா தெரிவித்தார்.முன்னதாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டத்தைப் பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், எங்கு விண்ணப்பிக்க வேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த முழு விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு கலெக்டர் வழங் கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், சப் கலெக்டர் கோகுல், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் பாண்டியன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கீதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வே) ராணி, விவசாயிகள் சங்க பிரதி நிதிகள் மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விதை நெல் 82.609 மெ.டன்கள் கையிருப்பு

கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தற்சமயம் 699 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதை கொள்முதலை பொறுத்த வரை விவசாயிகள் பயன் பாட்டிற்காக நெல் 82.609 மெ.டன்கள், சிறுதானியங் களில் 2.730 மெ.டன்கள், பயறு வகைகளில் 2.281 மெ.டன்கள், எண்ணெய் வித்து பயிர்களில் 20.704 டன் இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது