சிதம்பரம் நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை-நகரமன்ற தலைவர் தகவல்

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும், என நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
சிதம்பரம் நகரமன்ற கூட்டம், தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன், பொறியாளர் மகாராஜன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் ஜேம்ஸ்விஜயராகவன் பேசுகையில், புலிச்சமேடு மின் தகன மேடைக்கு தற்போது பணியாற்றி வரும் 5 நபர்களையே நிரந்தரமாக பணி நியமிக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

தில்லை மக்கீன் பேசும்போது, தமிழ்நாடு ஆளுநர் ரவி, தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து சிதம்பரம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ரமலான் மாதத்தை முன்னிட்டு சிதம்பரம் நகர இஸ்லாமிய மக்களுடன் இணைந்து மத நல்லிணக்க நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் பங்கேற்க வேண்டும், என்றார். அப்பு சந்திரசேகரன் பேசுகையில், சிதம்பரம் நகராட்சியில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக 22 மாதங்களில் ரூ.214 கோடிக்கு நலத்திட்ட பணிகள் நடைபெறுவது நகராட்சி வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

33 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு குப்பை வரி, குடிநீர் வரி, சொத்து வரி என தனித்தனியாக வரி நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இதனை ஒரே நோட்டீசாக வழங்க வேண்டும், என்றார். ராஜன் பேசும்போது, தமிழ்நாடு அரசு தடை விதித்து இருந்தும், சிதம்பரம் நகரில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகிறது. அதனை தடை செய்ய வேண்டும், என்றார்.

இதை தொடர்ந்து நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் பேசும்போது, நகராட்சி பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு கடைகளால் பாதசாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். நடைபாதை கடைகாரர்களுக்கு நிரந்தரமாக மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரமன்ற கனவு திட்டமான திருமண மண்டபம், வணிக வளாகம், 150வது ஆண்டு நினைவு நுழைவுவாயில் அமைக்கப்படும்.

நகராட்சியின் 33 வார்டுகளிலும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். கூட்டத்தில், நகரமன்ற துணை தலைவர் முத்துக்குமார், மூத்த நகரமன்ற உறுப்பினர் ரமேஷ், மணிகண்டன், அசோகன் உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர்.

Related posts

மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு

ரூ.14 ஆயிரம் கடனுக்காக 2 சிறுவர்கள் கொலை: நண்பனின் மகன்களை தீர்த்துக்கட்டிய கட்டிட மேஸ்திரி கைது

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பலி