போர் அபாயம்

காசா போர் முனையை தொடர்ந்து லெபனான் பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக கூறினாலும், லெபனான் நாட்டின் அப்பாவி மக்கள் இந்த தாக்குதலில் பலியாகி இருப்பது போரின் கொடூரத்தை காட்டியிருக்கிறது. இதில் ஈரானையும் உள்ளே இழுக்க இஸ்ரேல் முயற்சிப்பதாகவும், அதன் மூலம் இந்த போரை உலகப்போராக மாற்றக்கூடிய அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் உலகத்தலைவர்கள் ஐநாவில் பேசியிருப்பது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

1973ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி, சினாய் தீபகற்பம் மற்றும் கோலன் குன்றுகளை மீட்பதற்காக எகிப்தும், சிரியாவும் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தின. இதை கணிக்க முடியாமல் இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாட் தோல்வி கண்டது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐநா தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுத்ததால் அக்டோபர் 25ம் தேதி சண்டை முடிவுக்கு வந்தது. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் தாக்கப்பட்டது. இந்த முறை ஹமாஸ் 2023 அக்டோபர் 7ம் தேதி காசா எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்களைத் தாக்கியது.

இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸ் தாக்குதலை முன்கூட்டியே கண்டுபிடிக்காததும் மொசாட்டின் தோல்வி தான். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காசா பகுதியில் ஒரு போரைத் தொடங்கியது. இன்றுவரை நீடிக்கும் அந்த போரில் இதுவரை 45 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். ஹமாசுக்கு ஆதரவாக லெபனான் மற்றும் சிரியாவை தளமாக கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா போராளிகள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.

அவர்களுக்கு இஸ்ரேலும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தது. ஆனால் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகள் மூலம் லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா குழுவினரை ஒட்டுமொத்தமாக காலி செய்ய நடத்தப்பட்ட தாக்குதல் உலகை அதிர்ச்சியில் தள்ளி உள்ளது.  பேஜர், வாக்கி டாக்கியில் வெடிபொருள் வைக்கப்பட்டதா அல்லது அதிக அதிர்வெண் மூலம் பேட்டரிகளை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

இந்த அதிர்ச்சி தாக்குதலில் அதிர்ந்து போன ஹிஸ்புல்லா குழுவினர், இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்த, அதற்காக காத்திருந்த இஸ்ரேல் இப்போது லெபனான் மீது நேரடி தாக்குதலை தொடர்ந்து விட்டது. 500 பேர் பலி என்கிறார்கள். இஸ்ரேல் விமானப்படையின் உக்கிர தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவை மட்டுமல்ல, லெபனான் மக்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்படுவதுதான் கொடூரம்.

2006ம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா போராளிகள் உருவாக்கிய தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறிக்கொண்டாலும், இந்த போரை இன்னும் விரிவுபடுத்தி ஈரான், ஈராக், துருக்கி, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளையும் இதில் இழுத்து மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் அபாயத்தை உருவாக்கும் இஸ்ரேலின் தந்திரம் தான் இந்த நடவடிக்கை என்று உலக நாடுகள் எச்சரிக்க தொடங்கி உள்ளன. ஐநா பொதுச்சபையிலேயே ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் இதை பகிரங்கமாக எச்சரித்து இருக்கிறார். பூனைக்கு மணி கட்ட வேண்டியது அவசியம். இல்லை என்றால் உலக போராக மாறிவிடும்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு