முடிவின்றி நீடிக்கும் போர் ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் ராணுவம் தாக்குதல்: அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புதல்

கீவ்: ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைக்குள் உக்ரைன் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் 3வது ஆண்டாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் சிதிலமடைந்து விட்டன. ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா மற்றும் சில நாடுகள் எடுக்கும் சமாதான நடவடிக்கைள் எதுவும் பயன் தரவில்லை.

இந்த போரில் ஆரம்பத்தில் பலத்த அடி வாங்கிய உக்ரைன் தற்போது ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை குறி வைத்து அவ்வப்போது ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக ரஷ்யா ஆக்கிரமித்துள்ள குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் முன்னேறி தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் நேற்று முன்தினம் காணொலி செய்தி ஒன்றை வௌியிட்டார். அதில், “ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய எல்லைக்குள் 10கிமீ தூரத்துக்கு உக்ரைன் ராணுவம் முன்னேறி உள்ளது. ரஷ்யாவுக்குள் நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி உக்ரைன் ராணுவ தளபதியுடன் ஆலோசிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது அழுத்தம் தர முடியும், நீதியை மீட்டெடுக்க முடியும் என்பதை உக்ரைன் நிரூபித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே கீவ் நகரத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்