அலையாத்தி காடு, கடல் முகத்துவார பகுதிகளில் படகில் சென்று எஸ்பி அதிரடி ஆய்வு: மீனவர்களிடம் விவரங்கள் சேகரிப்பு

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, கடல் முகவத்துவார பகுதிகளில் படகில் சென்று திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் விவரங்கள் கேட்டறிந்தார். முத்துப்பேட்டை பகுதி அலையாத்திக்காட்டை வனத்துறை பராமரித்து வருகிறது. இந்த அரிய காட்டை காண, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்காக அலையாத்தி காட்டிற்குள் பல்வேறு வசதிகள் வனத்துறை சார்பில் செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு கஜா புயலுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வந்து தங்கும் அனைத்து வசதிகளுக்கும் சேதமாகியது. இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு சென்று தங்கி பார்வையிட்டு வருவதை, தற்போது வனத்துறை அனுமதிப்பதில்லை. அனுமதி இல்லாததால் கடந்த சில வருடமாக சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதில்லை.

இதை சமூக விரோதிகள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு அடிக்கடி இந்த காட்டில் தங்கி இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா போன்ற போதை பொருட்களும், ஏலக்காய் போன்ற விலை உயர்ந்த உணவு பொருட்களும் இங்கிருந்து கடத்தி செல்வதும், இலங்கையில்இருந்து தங்கம் போன்ற பொருட்களை கொண்டு வருவதுமாக உள்ளனர். சமீபத்தில் கடத்தல் நபர்கள் பலரும் போலீசில் சிக்கி உள்ளனர். சென்ற வாரம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இந்த காட்டில் புகுந்துதான் தஞ்சம் அடைந்தனர். ஆனால் போலீசார் திறம்பட செயலாற்றி பிடித்தனர். இந்த பகுதியை சமீப காலமாக போலீசார் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக முத்துப்பேட்டை பகுதியில் “சாகர்கவாச் 2023 ஆப்ரேஷன்” போலீசார் பாதுக்காப்பு ஒத்திகை நடைபெற்றது. திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, டிஎஸ்பி தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வனசரக அலுவலர் ஜனனி கடலோர காவல் படை சப்.இன்ஸ்பெக்டர் ரகுபதி உள்ளிட்ட போலீசார் படகு மூலம் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் அலையாத்திகாடு, லகூன் மற்றும் ஆபத்தான பகுதியான சேத்துக்குடா, கடல் முகத்துவாரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டும் காட்டில் உள்ளே செல்ல முடியாத பகுதிக்கு டிரோன் கேமரா அனுப்பியும் ஆய்வு செய்தனர்.

மேலும் திருவாரூர்எஸ்பி எஸ்பி சுரேஷ்குமார், காட்டின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு, அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடமும் விவரங்களை கேட்டறிந்தார். சுமார் 3 மணி நேர ஆய்வுக்கு பின்னர் மீண்டும் கரை திரும்பினார்.

மேலும் ஜாம்புவானோடை படகு துறை மற்றும் அதை சுற்றியுள்ள காடுகளை பார்வைட்டவர் பின்னர், ஆசாத்நகர் கோரையாறு பாலம் அருகே நின்று அங்குள்ள மீனவர்களின் படகுகள் அங்கிருந்து கடல் செல்லும் பகுதிகளை பார்வையிட்டார்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை