நடைப்பயண ஆட்களை பார்த்து தொழிலதிபர்கள் ஓட்டம் பிடிக்கும் விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தமிழ்நாடு ரயில்வே போலீசை அலைக்கழிக்கிறதா சொல்றாங்களே.. என்னா விஷயம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருக்கும் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் நிலையம் மிக மோசமான கட்டிடத்தில் இருக்கிறதாம். தற்போது இருக்கும் இடத்தை மாற்றி விட்டு, புதிய இடத்தில் போலீஸ் நிலையம் கட்ட ரயில்வே இடம் கொடுக்காமல் இருக்கிறதாம். மேலும் ஒதுக்கப்பட்ட நிதியையும் ரயில்வே அதிகாரிகள் வேறு திட்டத்துக்கு திருப்பி விட்டு விட்டார்களாம். இதனால் தற்போதைய காவல் நிலைய கட்டிடம் பழசாகி உள்ளே இருக்கும் பைல்களும் மழையில் நனையும் நிலை வந்து விட்டதாம். ஆனால் ரயில்வே பாதுகாப்பு படைக்கு புதிய கட்டிடம் கட்டி ஜொலிக்கிறதாம். தமிழ்நாடு ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு தான் புதிய கட்டிடம் கட்ட இடம் கொடுக்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடிப்பு செய்வதாக பேசுகிறார்கள். திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்து உடனடியாக மாற்றி மதுரை கோட்டத்தில் இணைச்சா தான் புதிய பில்டிங் கிடைக்கும் என பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விஜிலென்ஸ் ரெய்டு பீதியில் புது டெக்னிக்கை அதிகாரிகள் கடைப்பிடித்திருக்காங்க போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் அரசு அதிகாரிகள், வசூல் வேட்டையில் விஜிலென்ஸ் பிடியில் சிக்குவது ஒவ்வோர் ஆண்டும் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக துணைஆட்சியர் நிலையில் டாஸ்மாக் மேலாளர், ஆதிதிராவிட நல அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அலுவலர்களை விஜிலென்ஸ் பொறி வைத்து பிடித்து வந்தனர். இதனால் இந்த ஆண்டு உஷாரான அதிகாரிகள், கடந்த சில நாட்களாக அலுவலகம் வருவதை தவிர்த்து ஆய்வு என்ற பெயரில் காரிலேயே வலம் வந்து, தங்களது வழக்கமான பணிகளை கச்சிதமாக முடித்து சென்றுவிட்டனர். கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பிற துறை அலுவலகத்தில் விஜிலென்ஸ் வைத்த பொறி, இந்த ஆண்டு ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாம். விஜிலென்ஸ் ரெய்டு பீதியில் அதிகாரிகள் உஷாரானதால், இந்த ஆண்டு யாரும் சிக்கவில்லை என்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனி ஆதரவாளர்கள் நிலை ரொம்ப பரிதாபமா மாறிடுச்சாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிராமங்களில் துண்டை காணோம், துணியை காணோம் என்பார்கள். அது யாருக்கு பொருத்தமோ, இல்லையோ, தேனிக்காரரின் விசுவாசிகளுக்கு தற்போது அந்த நிலை தான் என்ற பேச்சு அல்வா உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓங்கி ஒலித்து வருகிறது. இலை கட்சியில் இருந்து தேனிக்காரர் நீக்கப்பட்ட போதிலும், நீக்கியது செல்லாது என பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தார். இலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என்று தேனிக்காரரும், அவரது ஆதரவாளர்களும் கூறி வந்தனர். ஆனால் சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு பிறகு தேனிக்காரரின் காரில் கொடி இல்லை. கரை வேட்டி மாறி விட்டது. இதனால் தேனிக்காரரின் பின்னால் அணிவகுத்து சென்றவர்களின் நிலைமையும் அதோகதியாகி உள்ளது. அல்வா மாவட்டத்தில் தேனிக்காரருக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. தற்போது கட்சியும் இல்லை, கொடியும் இல்லை என்றாகி விட்ட நிலையில், எந்தக் கொடியை காரில் கட்டுவது, எந்த வேட்டியை உடுத்துவது என அல்வா மாவட்ட தேனிக்காரரின் ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர். கொடி இல்லாத காரில் பயணம் செய்யும் அவர்களை அல்வா மாவட்ட இலை கட்சியினர் நையாண்டி செய்து வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை நிர்வாகிகளை பார்த்து தொழிலதிபர்கள் ஏன் ஓட்டம் பிடிக்கிறார்கள்..’’ என சந்தேகத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரைக்கட்சி தலைவரின் நடைப்பயணத்தில வசூல் வேட்டை பயங்கரமாக நடக்குதுனு புகார் கிளம்பியிருக்கும் வேளையில், அது மாங்கனி மாவட்டத்திலும் பரவலா பேசப்படுதாம். அடுத்த சில நாட்களில் மாங்கனி மாவட்டத்தில இந்த பயணம் நடக்க இருக்கும் நிலையில், முக்கிய மாநில நிர்வாகிகள் மாவட்டத்தை வட்டமிட்டு வாராங்களாம். பெரிய தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்கள் பட்டியலை எடுத்து, அணி வாரியாக வசூல் வேட்டையை ஆரம்பிச்சிட்டாங்களாம். இதனால மாங்கனி மாநகரில் சில தொழிலதிபர்கள், காவி துணியை பார்த்ததும் ஓட்டம் பிடிக்கிறார்களாம். இன்னும் பத்து நாளுக்குள்ள எல்லாத்தையும் பார்த்து முடிச்சிட வேண்டுமுனு முக்கிய நிர்வாகிகளுக்கு அசைன்மெண்டாம். அதனால தொழிலதிபர்கள் எல்லாம், தீபாவளியோட ஏகப்பட்ட செலவாகிபோச்சுனு சொல்லி வெளியூருக்கு ஓட்டம் பிடிச்சு வாராங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

****

Related posts

16 கடைகளுக்கு நோட்டீஸ்: ரூ.12 ஆயிரம் அபராதம் 73 பானிபூரி கடைகளில் ரெய்டு

திருச்சியில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்