Saturday, September 21, 2024
Home » நடைப் பயிற்சி நல்லது!

நடைப் பயிற்சி நல்லது!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் நோயில்லாத உடல் வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை.

இயந்திர வாழ்க்கையில் உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. உணவுமுறை மாறிவிட்டது. செயற்கை உணவும் பதப்படுத்தப்பட்ட உணவும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால் இளமையிலேயே உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டுமானால் உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்தவழி. நடைப்பயிற்சி ஆரோக்கியமாக இருப்பதற்கும் அளவுக்கு அதிகமான எடையை குறைப்பதற்கும் பயன்படும் எளிய மற்றும் சுலபமான வழிகளில் ஒன்றாகும். எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பும் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி சிறந்த ஒன்றாகும். அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இதயநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும்குறைவு.

சத்தமில்லா உயிர்க்கொல்லி என கூறப்படும் உயர் ரத்த அழுத்த நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தசைகளுக்கு செல்லும் பிராண வாயுவை அதிகரித்து ரத்த நாளங்களை விரிவடையச் செய்து ரத்தஅழுத்தத்தை குறைக்கிறது. நடைப்பயிற்சி நல்ல மனநிலையை ஊக்குவித்து மன உளைச்சல் வராமல் தடுக்கும். தவிர அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் மற்றவர்களை காட்டிலும் அதிக ஆற்றலோடு மன உளைச்சலை எதிர்த்து போராட இயலும்.

நடைப்பயிற்சி பகல் பொழுதில் உடல் சக்தியை ஊக்கப்படுத்துவதால் இரவில் நீண்ட நேரம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். தினமும் நடைப்பயிற்சி செய்யும்போது உடலில் செயல்படாமலிருக்கும் இன்சுலின் சுரபான்கள் தூண்டுதலினால் மீண்டும் அவை புத்துயிர் பெற்று செயல்படத் தொடங்கும். நடைப்பயிற்சி நோய்எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களை அண்டாமல் தடுக்கிறது. கெட்டகொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் இதய நலமும் மேம்படும்.

நடைப்பிற்சியானது ஒரு நாளைக்கு சுமார் 300 கலோரிகள் வரை எரிப்பதற்கு உதவும். 40 வயது ஆகிவிட்டாலே முழங்கால் வலி தொடங்கிவிடும். மூட்டில் ஏற்படும் தேய்மானம்தான் இதற்கு காரணம். 20 வயதிலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொண்டால் முழங்கால் வலி வருவது தடுக்கப்படுகிறது. நடைப்பயிற்சி மூட்டுகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். தசை நார்களையும் பலப்படுத்தும். மூட்டுகளை தேயவிடாமல் பாதுகாக்கும். நல்ல நடைப்பயிற்சி கால்கலை வலுவாக்கி அவற்றிற்கு அழகிய வடிவத்தைக் கொடுக்கும். கெண்டைகால் தசைகள், தொடைகள், பின்னங்கால் தசை நார்கள் போன்றவற்றிற்கு கட்டுக்கோப்பான வடிவை அளிக்கிறது.

வயிற்றுத் தசைகளை இறுகச் செய்து இடுப்பு பகுதியை அழகாக்குகிறது. உடல் எடைதான் எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ளது. தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எடை அதிகரிப்பதால் தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமன்றி காணப்படும். நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் லூசான தசை வலுவடையும். காலையில் மேற்கொளளும் நடைப்பயிற்சியால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.

அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைப்பயிற்சிக்கு ஏற்ற நேரம். இந்த நேரத்தில் சுற்றுச்சூழலில் மாசு குறைவாக இருக்கும். நடைப்பயிற்சி செய்யும்போது மென்மையான ஷூ பயன்படுத்தலாம். காற்றில் உள்ள ஆக்ஸிஜனை அதிக அளவில் சுவாச மண்டலம். இதய நாள மண்டலம் நன்கு பயன்படுத்திக் கொள்ளும். நுரையீரலின் சுவாசதிறன் அதிகரிக்கும். அலர்ஜி, ஆஸ்துமா போன்ற சுவாச நோய் கட்டுப்படும்.

தூய காற்றோட்டமுள்ள திறந்த வெளிகளில், பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்து வந்தால் ஆரோக்கியமானது. தினமும் குறைந்தது. 30 நிமிடம் அதிகபட்சம் 1 மணி நேரம் நடக்க வேண்டும். தினமும் 3 லிருந்து 5 கி.மீட்டர் நடக்க வேண்டும். தினமும் நடக்க இயலாதவர்கள் வாரத்தில் 5 நாள்கள் அல்லது 150 நமிடம் நடந்தாலும் நன்மைதான். சாப்பிட்டதும் குறுநடை செய்வது நலம். நடைப்பயிற்சி செய்யும்போது சுவாசிக்க சிரமம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், நெஞ்சு வலி, நெஞ்சு அடைப்பு, இதயபடபடப்பு, வழக்கத்திற்கு மாறாக அதிக வியர்வை தெரிந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். உயர்ரத்த அழுத்தம். நெஞ்சுவலி, முழங்கால் வலி, குதிகால்வலி போன்ற பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபின் நடக்கவும்.

தொகுப்பு : இரா. அமிர்தவர்ஷினி

You may also like

Leave a Comment

10 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi