வாலாஜாபாத் பகுதியில் தார்ப்பாய் இன்றி சென்ற லாரிகளுக்கு அபராதம்: மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் 25க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த, கல்குவாரிகளில் இருந்து சவுட்டு மண், ஜல்லி கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் வாலாஜாபாத் வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதனால், கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகள், முறையாக தார்ப்பாயின்றி செல்வதால் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி பல்வேறு வாகன ஓட்டிகள் நாள்தோறும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, பலமுறை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.

இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன், நேற்று திடீரென வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் வழியாக முறையாக தார்ப்பாய் இன்றி வரும் லாரிகளை மடக்கி பிடித்து, ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை வரவழைத்து, தார்ப்பாய் இன்றி வாலாஜாபாத் வழியாக செல்லும் அனைத்து லாரிகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து, அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மடக்கி அதற்கான ஆவணங்கள் சரிபார்த்து அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றால் இப்பகுதியில் தார்ப்பாய் இன்றி செல்லும் லாரிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு