வாலாஜாபாத்தில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை சுந்தர் எம்.எல்.ஏ வழங்கினார். வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசிலாமணி மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சொர்ணலட்சுமி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 333 பேர், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 138 பேர், மாசிலாமணி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 114 பேர் ஆகியோருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

பின்னர், மாணவ, மாணவிகளிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு கல்வி, விளையாட்டு உள்ளிட்டவற்றில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு வகையில் செயல் திட்டங்கள் தீட்டி வருகிறது. மேலும் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி அளவில் முதல் 3 இடம் பிடிப்பவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சேகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?