வாலாஜாபாத்தில் ஒருநாள் விழிப்புணர்வு மரபு பயணம்: வரலாற்று ஆர்வலர்கள் பங்கேற்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மரபு பயணத்தின்போது கல்வெட்டுகளையும், சின்னங்களையும் வரலாற்று ஆர்வலர்கள் பார்த்து விழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்வெட்டுக்கள் மற்றும் வரலாற்று சின்னங்களை கண்டெடுத்து ஆய்வு செய்யும் பணிகளை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம் தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில், வாலாஜாபாத் அருகே வரலாற்று சிறப்பு கொண்டுள்ள பழையசீவரம், திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வெட்டுக்களையும், வரலாற்று சின்னங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் ஒருநாள் விழிப்புணர்வு மரபு பயணம் நிகழ்ச்சி நேற்று வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம் தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில், சென்னை மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் கலந்துகொண்டு, தொல்லியல் மற்றும் கல்வெட்டுகள் குறித்து வரலாற்று ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து அதற்கான விளக்கத்தையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, மூத்த தொல்லியல் அறிஞர் வீரராகவன் பழங்கால கல்வெட்டுகளை எவ்வாறு படிப்பது என விளக்கி கூறினார். பின்னர் பழையசீவரம், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளுக்கு வரலாறு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், ஆர்வலர்களை அழைத்துச்சென்று கல்வெட்டுக்களையும், வரலாற்று சின்னங்களையும் காண்பித்து காஞ்சிபுரம் அருங்காட்சியகம் காப்பாற்றிய உமாசங்கர் தொல்லியல் அறிஞர் மங்கையர்கரசி வீரராகவன் ஆகியோர் கள ஆய்வில் விளக்கி கூறினர். இந்நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளர்கள் கொற்றவை ஆதவன், மோகன கிருஷ்ணன், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வம் கொண்ட இளம் தலைமுறைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!