வாலாஜாவில் கொட்டித்தீர்த்த மழை; தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்: வாகனங்கள் சர்வீஸ் சாலையில் சென்றதால் நெரிசல்

வாலாஜா: வாலாஜாவில் பலத்த மழை பெய்ததால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் வாகனங்களை சர்வீஸ் சாலையில் அனுப்பி வைத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஓடியது. தாழ்வாக உள்ள சாலைகள், தெருக்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது.

இந்நிலையில் பலத்த மழையால் வாலாஜா டோல்கேட் அருகே வேலூரிலிருந்து சென்னை செல்லும் சாலையில் இன்று அதிகாலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனைக்கண்ட வாகன ஓட்டிகள், பள்ளத்தில் இறங்கினால் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகும் என்ற அச்சத்தில் திடீரென தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் அடுத்தடுத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

தகவலறிந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் தார், ஜல்லி உள்ளிட்டவைகளை கொண்டு பள்ளத்தில் கொட்டி அதனை இயந்திரம் மூலம் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். பள்ளம் சீரமைப்பு பணி காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ‌ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.

Related posts

திருச்சி: பைக்கில் சாகசம் செய்தவர் கைது

மதுரையில் பிரபல தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தற்கொலை முயற்சி

தக்கலையில் காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டை சூறையாடிய கும்பல்