வாலாஜா நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டி பொதுமக்கள் போராட்டம்

*அதிகாரிகள் சமரசம்

வாலாஜா : வாலாஜா நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டி பொதுமக்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வாலாஜா நகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட கச்சாலநாயக்கன் தெருவில் கடந்த சில மாதங்களாக குப்பைகளை அகற்றுவதில்லை மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சரிவர சுத்தம் செய்வது இல்லை என கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்த வார்டு கவுன்சிலர் ஜமுனாராணி நகர மன்ற கூட்டத்தில் பலமுறை புகார் தெரிவித்து வந்துள்ளார். மேலும், அப்பகுதி இளைஞர்களே குப்பைகளை அள்ளுவது, கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவ்வாறு துப்புரவு செய்யப்பட்டு அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை டிரம்களில் கொட்டி வந்துள்ளனர்.

அந்த குப்பைகளை அள்ளிச்செல்லவும் நகராட்சி குப்பை வண்டிகள் சரிவர வருவதில்லை‌யாம். இதனால் குப்பைகள் தேங்கி வந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்து வந்தும் பலன் இல்லையாம்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் நேற்று காலை, குவிந்து கிடந்த குப்பைகளை எடுத்து வந்து நகராட்சி அலுவலகம் முன்பு கொட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மறுநாள் வார்டில் உள்ள குப்பைகளை அகற்றுவதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி