வைகை அணையில் சுற்றுலாப் பயணிகள் ஆழத்தின் ஆபத்தை உணராமல் ‘செல்பி’: பொதுப்பணித்துறையினர், போலீசார் கண்காணிப்பு அவசியம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் முன்புறம் பகுதியிலும் நீர்தேக்கத்தில் இறங்கி ஆபத்தான இடத்தில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை பணியாளர்களும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியாறு அணையில் இருந்து திறந்து விடபடும் தண்ணீர் மற்றும் வருசநாடு, மூலவைகை ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து 5 மாவட்டங்களுக்கு முறையாக பயன்படுத்த வைகை அணை கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து வைகை பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது. அணையில் இருந்து பெரியார் பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது.

இதில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசன பபகுதியாகவும், 85 ஆயிரத்து 563 ஏக்கர் ஒருபோக பாசன பகுதியாகவும், 19 ஆயிரத்து 439 ஏக்கர் திருமங்கலம் பிரதான கால்வாய் பகுதியாகவும், 38 ஆயிரத்து 248 ஏக்கர் விரிவாக்கப்பட்ட பெரியார் பிரதான கால்வாயாகவும் உள்ளது. அணை பகுதியை மேசனரி டேம் என்று அழைக்கப்படும். மேசனரி டேம் பகுதியில் நீர் கசிவு இல்லாத பகுதியின் நீளம் 214.20 மீட்டராக உள்ளது. கசிவு வழி பகுதியின் நீளம் 101.80 மீட்டராக உள்ளது.

அணையில் 7 பெரிய மதகுகளும், 7 சிறிய மதகுகளும் உள்ளது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் மூலம் 6 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீர்தேக்கத்தில் எர்த் டேம் நீளம் 25 அடியாகவும், உயரம் 85 அடியாகவும் உள்ளது. பூங்கா பகுதியில் வலதுகரை, இடதுகரை என பூங்கா உள்ளது. இதில் இடது கரை பூங்கா 14.6 ஏக்கர் பரப்பளவிலும், வலது கரை பூங்கா 36 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இந்த வைகை அணை பூங்கா மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இந்த பூங்காவில் வலது கரை பூங்கா, இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்கா பகுதிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் பூங்காவிற்கு விடுமுறை மட்டும் விஷேச நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்த பூங்கா பகுதியில் சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஊஞ்சல், மலைகள் போல் அமைக்கப்பட்டுள்ள வரைபடங்கள், நீரூற்றுகள், புல்தரைகள், ஆங்காங்கே ஓய்விடங்கள், குழந்தைகள் குஷியாக சென்றுவர உல்லாச ரயில், படகு குழாம், இசையுடன் தண்ணீர் நடனமாடும் வகையில் அமைக்கப்பட்டு இசை நடன நீரூற்று என ஏராளமான அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூங்கா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் வருகின்றனர். பூங்காவை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவையும், அணையையும் சுற்றி பார்த்து ரசிப்பதுடன், ஆபத்தை உணராமல் அணையின் நீர்தேக்க பகுதியில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.

அணையின் முன் தோற்றத்தை ஆபத்தான முறையில் சுற்றுலாப் பணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இரு கரைகளை இணைக்கும் பாலத்தின் அருகே செல்லும் தண்ணீர் இருக்கும் பகுதியில் குடும்பத்துடன் சேர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இதேபோல அணையின் முன்புறம் தோற்றத்திற்கு எதிரே டைனோசர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து ஆபத்தான முறையில் மேலே ஏறி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுப்பணித்துறை பணியாளர்களும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து ஏற்படும் அபாயம்
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் முன்புறம் பகுதியிலும் நீர்தேக்கத்தில் இறங்கி ஆபத்தான இடத்தில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.
இதேபோல் இருகரைகளிலும் அணையின் மதகுப் பகுதி முன்பு ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் வருகின்றனர்.

இதேபோல் அணையின் பின்புறம் நீரை தேக்கி வைப்பதற்காக கட்டப்பட்ட அணையின் கற்கள் பகுதியில் குடும்பமாகவும், நண்பர்களுடனும் சேர்ந்து ஆபத்தான பகுதியில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தடுப்பதற்கு பொதுப்பணித்துறை பணியாளர்களும் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்

கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’