நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர் காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது: 59 சதவீத வாக்குகள் பதிவானது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ல் கடைசியாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற பாஜ-பிடிபி கூட்டணி 2018ல் முறிந்ததால், ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. பின்னர், கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசமாக மாநிலம் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலை 3 கட்டமாக நடத்துவதாக தேர்தல் ஆணையம் தேதி அறிவித்தது. இதில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் கூட்டணியும், பாஜ, பிடிபி உள்ளிட்ட கட்சிகளும் தனித்தும் களமிறங்கின. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 16 இடங்கள், ஜம்முவில் 8 இடங்கள் என 7 மாவட்டங்களின் 24 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் 90 சுயேச்சைகள் உள்பட 219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 23 லட்சம் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பெண்கள், வயதானவர்கள், இளம் வாக்காளர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் காஷ்மீர் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற அழைப்பு விடுத்தனர். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் தேர்தல் அமைதியாக நடந்தது. பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. பிஜ்பெஹாரா, டி.எச்.போரா பகுதிகளில் சிலர் மோதிக் கொண்டதைத் தவிர பதற்றமான எந்த சம்பவமும் நடக்கவில்லை. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், முதல் கட்ட தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்த இரு கட்டமாக வரும் 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடத்தப்படும். அக். 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?