விகே. பாண்டியனை அவமதிப்பதாக நினைத்து தமிழர் கலாச்சாரத்தை அவமதித்த பா.ஜ வீடியோவால் சர்ச்சை

புவனேஷ்வர்:வி.கே.பாண்டியனை அவமதிப்பதாக நினைத்து தமிழர் கலாச்சாரம், உணவு முறை, உடை ஆகியவற்றை பா.ஜ வெளியிட்ட பிரசார வீடியோ அவமதித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ சார்பில் வெளியிட்ட வீடியோ இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் முதல்வர் நவீன்பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய வி.கே. பாண்டியனை அவமதிப்பதாக நினைத்து தமிழர்களையும், தமிழ்நாடு கலாச்சாரத்தையும் பா.ஜ அந்த வீடியோவில் அவமதித்து உள்ளது. தமிழர் கலாச்சாரப்படி வேட்டி, சட்டை அணிந்து சாப்பிட அமர்ந்துள்ளவர் முன்பு ஒடிசா கலாச்சாரப்படி குண்டு சட்டியில் தண்ணீர் கலந்த சாதம் வழங்கப்படுகிறது.

அதை தமிழ்நாட்டு உணவு வழக்கப்படி இலை கொண்டு வந்து பரிமாறும்படி வேட்டி, சட்டை அணிந்து இருப்பவர் கூறுகிறார். இலை கொண்டு வந்து தண்ணீர் கலந்த சாதம் அதில் பறிமாறப்படும் போது அது இலைக்கு வெளியே வந்து கொட்டுகிறது. அதனை தொடர்ந்து பை, பை, பாண்டியா என்று அந்த விளம்பரத்தில் வி.கே. பாண்டியனை குறிக்கும் வகையில் கூறப்படுகிறது. இது தமிழர் கலாச்சாரம், உடை, உணவு முறைகளை அப்பட்டமாக பா.ஜ அவமதித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

* 115 எம்எல்ஏ, 15 எம்பி தொகுதிகளில் வெற்றி
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட உதவியாளரும், பிஜூ ஜனதா தள தலைவருமான வி.கே.பாண்டியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வி.கே.பாண்டியன், “2019 தேர்தலில் 113 பேரவை தொகுதிகளிலும், 12 மக்களவை தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்றது. தற்போது 2024ல் 3ம் கட்ட வாக்குப் பதிவுக்கு பின் 85 தொகுதிகளில் ஆளும் பிஜூ ஜனதா தளத்தின் வெற்றி உறுதியானது. தற்போது 4ம் கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகு 115 பேரவை தொகுதிகளிலும், 15 மக்களவை தொகுதிகளிலும் மாநிலத்தில் ஆளும் கட்சியின் வெற்றி உறுதியாகி விட்டது. 3ல் 1 பங்கு பெரும்பான்மையுடன் பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைக்கும். எங்களை ஆசீர்வதித்த ஒடிசா மக்களுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். மேலும் நாட்டுக்கு வலுவான மற்றும் மாற்றத்தக்க நிர்வாகத்தை வழங்க பிஜூ ஜனதா தளம் கடமைப்பட்டுள்ளது. பிஜூ ஜனதா தளம் தொடர்ந்து 6ம் முறையாக அரசு அமைக்கும். நவீன் பட்நாயக் ஜூன் 9ம் தேதி முதல்வராக பதவி ஏற்பார்” என்று உறுதியுடன் கூறினார்.

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து