இடஒதுக்கீடு கேட்டு பார்வை மாற்றுத்திறனாளிகள் வழக்கு சட்டப்பூர்வமான போராட்டம் நடத்த காவல் துறையின் அனுமதி கோரலாம்: மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீட்டில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய அனுமதியை பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்யும் நிலையில், பார்வை மாற்றுத் திறனாளிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி உத்தரவிடக் கோரி கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமைதான். அதை சட்டப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும். திடீரென சாலையில் அமர்ந்து ஒருவரும் போராட முடியாது. காவல்துறையில் அனுமதி பெற வேண்டும், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில், அவற்றை நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை நாடலாம். ஒருவேளை சட்டப்படி நடத்தப்படக்கூடிய ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டத்தில் காவல்துறையினர் அத்துமீறினால் அதில் நீதிமன்றம் தலையிடும். மனுதாரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையை அணுக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!