விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு: திருமாவளவன் அறிவிப்பு

திருச்சி: விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் மதுஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமானநிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த உள்ளோம். போதைப்பொருட்கள் ஒழிப்பை மாநில அளவிலான பிரச்னையாக கருதாமல் தேசிய பிரச்னையாக கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற மாநாடாக இது அமையும். இந்த மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பழநியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முருகன் மாநாடு லட்சக்கணக்கான மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது.

பாஜ, ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் கடவுள், மதத்தை பயன்படுத்தி மக்களை அரசியல் அடிப்படை வாக்கு வங்கியாக மாற்றுவதற்கு வட இந்தியாவில் முயற்சித்தது. அந்த முயற்சிகளுக்கு இடம் அளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தக்கூடிய வகையிலேயே இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது என்றால் அதை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பக்தி இலக்கியங்கள் தொடர்பான போட்டிகள் நடத்தப்படும் என்று சொல்லியுள்ளனர். இது மதம் சார்ந்த நடவடிக்கையாக அமைந்து விடாமல் அரசு கவனித்து கொள்ளும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார்
மயிலாடுதுறையில் கடந்த 2003ல் விசிக சார்பில் மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிரான பேரணி நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று காலை விசிக பொறுப்பாளர்கள் 18 பேர் ஆஜராகினர். காலதாமதம் ஆனதால் முதலில் வீடியோ கான்பரன்சில் ஆஜரான திருமாவளவன் மாலை 4.30 மணி அளவில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி விஜயகுமாரி, குற்றச்சாட்டை ஒத்துக்கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு குற்றச்சாட்டை மறுப்பதாக பதில் அளித்தார். பின்னர் விசாரணை செப்டம்பர் 11க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது: திருமாவளவன்

இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டம்