விஸ்வாமித்திரருக்கு “மறைமுனிவன்” என்ற பெயர் ஏன் தெரியுமா?

இராமாயணத்தில் எத்தனையோ ரகசியங்கள் உண்டு. அதில் ஒரு ரகசியம் விஸ்வா மித்திரரை “மறை முனிவன்” என்ற பட்டத்தோடு ஆழ்வார்கள் குறிப்பிடுவது. “மந்திரங்கொள் மறைமுனிவன்”. எங்கேயிருந்து இந்த வார்த்தையை எடுத்தார் என்று பார்க்க வேண்டும். குலசேகர ஆழ்வாரின் “பெருமாள் திருமொழி” பாசுரத்திலிருந்து எடுத்தார். அந்தப் பாசுரம் இது.

“வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக்
கீறி
வருகுருதி பொழிதரவன் கணையொன்
றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி
காத்து
வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்
மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண்
சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவர் ஏத்த
அணிமணியா சனத்திருந்த அம்மான் தானே.

இதில், வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி, மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து, வல்லரக்கருயிருண்டு என்ற பதங்களை மட்டும் பாசுரப்படி ராமாயணத்துக்காக இணைக்கிறார். இராமன் 16 வயது நிரம்பாத பாலகன் அப்பொழுதுதான் அவன் அஸ்திர சாஸ்திரப் பயிற்சிகளை எல்லாம் முடித்துக் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறான்.

குருகுல வாசமாக கல்விச்சாலையிலே காலம் கழித்துவிட்ட தன்னுடைய மகனை, பக்கத்திலே வைத்துக்கொண்டு அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தான் தசரதன். தவம் செய்து பிறந்த பிள்ளை அல்லவா! ஆகையினால் அவனுக்கு எப்பொழுதும் இராமனைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை. தசரதனின் ராஜ சபைக்கு அருகிலே உள்ள வீடுதான் இளைய மனைவி கைகேயி வீடு.

தசரதன் கைகேயியின் மீது அதிக அன்பு கொண்டவன். அதற்குக் காரணம், பரதன் கைகேயிக்குப் பிள்ளையாகப் பிறந்தாலும்கூட எப்பொழுதும் இராமனை தன் அருகிலேயே வைத்திருப்பாள் கைகேயி. இராமன் இல்லாவிட்டால் அவள் இல்லை என்று சொல்லும் படியாக அதிக அன்பு செலுத்தி பாசத்தோடு பார்த்துக் கொண்டிருப்பாள். தன் கண்மணி ராமனை கைகேயியும் விரும்புவதால் இளைய மனைவியான அவளிடம் மிக அன்பு கொண்டிருந்தான் தசரதன். அரசவையிலே காரியம் ஆற்றிக் கொண்டு இருந்தாலும்கூட அவன் சிந்தனை எல்லாம் ராமனிடத்திலேயே இருக்கும்.

அரசவையில் ஏதாவது ஒன்றைப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு ராமன் நினைவு வந்து விடும். உடனே தன்னுடைய மெய்காப்பாளனை அழைத்து கைகேயியின் அரண்மனைக்குச் சென்று ராமனை அழைத்து வா என்று உத்தரவு கொடுப்பான். ஏதோ என்னவோ என்று ராமன் ஓடி வருவான். ஓடி வரும்போது அவனையே விழுங்கிவிடுவது போல் பார்ப்பான். ஓடி வந்தவனை தன்னுடைய மடி மீது அமர வைத்து தசரதன் கொஞ்சுவான். “ஏன் அப்பா அழைத்தீர்கள்?” என்று ராமன் கேட்டவுடன், சிரித்துக்கொண்டே, ‘‘சும்மாதான் அழைத்தேன் ராமா, நீ செல்லலாம்’’ என்று விடை கொடுப்பான்.

‘‘சரியப்பா’’ என்று தந்தையின் கால்களில் விழுந்து வணங்கி விடை பெற்றுக்கொண்டு, ராமன் செல்லுகின்ற பொழுது அவன் செல்லும் அழகையே பார்த்துக்கொண்டிருப்பான் தசரதன். அவன் சற்று தூரம் சென்றவுடன், அவன் மனது பொறாமல் ‘‘ராமா’’ என்று உரக்க அழைப்பான். சட்டென்று திருப்பும் ராமன் கண்களை அகல விரித்து, ‘‘கூப்பிட்டீர்களா, தந்தையே’’ என்று ஓடிவந்து தந்தையின் மடியில் அமர்ந்து கொள்வான்.

இப்படி அவனுக்கு விடை கொடுத்து அனுப்புவதும், அவன் சென்றவுடன் அவனை திரும்பி அழைப்பதுமாக அந்த அலுவல் நாள் கழியும் என்பதை வேறு யாரும் சொல்லவில்லை. குலசேகர் ஆழ்வார் மிக அற்புதமான ஒரு பாசுரத்திலே பாடுகின்றார். இப்படிப்பட்ட பாசுரம் கம்ப ராமாயணத்தில்கூட இல்லை. இது, தசரதன் ராமன்மீது கொண்ட அன்பையும் அவன் எப்படி ராமனை நினைத்திருந்தான் என்கின்ற அவனுடைய தாய்மை நிறைந்த தந்தை மையையும் காட்டுகின்ற அற்புதமான பாட்டு.

“வா போகு வா இன்னம் வந்து ஒருகாற்
கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலும் எழில் – தோளி தன்
பொருட்டா
விடையோன்தன் வில்லைச் செற்றாய்
மா போகு நெடுங் கானம் வல்வினையேன்
மனம் உருக்கும் மகனே இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
போகாதே நிற்குமாறே’’

– என்று அந்த பாசுரம் வரும்

இப்படிப்பட்ட அந்த ராமனை மறுபடியும் தன்னிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்வதற்காக வருகின்றார், விஸ்வாமித்திர மகரிஷி. விஸ்வாமித்திரர் மிகப்பெரும் முனிவர், குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். வசிஷ்டரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர்.

காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக்வேதத்தின் பல பகுதிகளை எழுதியவர். `விஸ்வாமித்ரா’ என்ற பெயர் அற்புதமானது. விஸ்வம் என்றால் பிரபஞ்சம். உலகம். பரமாத்மாவுக்கு `விஸ்வம்’ என்ற பெயருண்டு. `மித்ரன்’ என்றால் நல்லுறவு, நட்புறவு, விஸ்வாமித்ரா என்றால் ‘‘உலகின் நண்பன்’’. என்று பொருள். தனது விடாமுயற்சி மற்றும் பக்திக்குப் பெயர் பெற்றவர்.

ராம அவதாரத்தில், விஸ்வமாகிய பரம்பொருள்தான் ராமனாக வந்து அயோத்தியில் அவதரித்திருக்கிறான் என்பது மகரிஷிகள் மட்டுமே அறிந்த, குறிப்பாக வசிஷ்டர் மட்டுமே அறிந்த பிரம்ம அவதார ரகசியம். அதை முதல் முதலில் போட்டு சபையில் உடைத்தவர் விஸ்வாமித்திரர். அவர் நேராக தசரதனிடம் சென்று, ‘‘என்னுடைய வேள்வி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.

அரக்கர்கள் அந்த வேள்வியை அவ்வப்பொழுது வந்து அழித்தும் சிதைத்தும் சென்று விடுகின்றார்கள். அவர்களை நான் என் தவ வலிமையால் சபித்து விடலாம். என்றாலும்கூட, என்னுடைய வேள்விக்கு அது இடையூறு என்பதால் அவர்களை சபிக்கவில்லை. இது உலக நன்மைக்காக நடத்துகின்ற வேள்வி. நீ அரசன். இந்திரனுக்கு நிகரானவன். உலக நன்மைக்காக நடத்து கின்ற எந்தச் செயலையும் நீ ஆதரிக்க வேண்டும், காப்பாற்ற வேண்டும்.

அதனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். உன்னுடைய நான்கு பிள்ளைகளில் கரிய நிறமுடைய ராமனை, நீ என்னுடன் அனுப்பி, என்னுடைய வேள்வியைக் காத்து உதவ வேண்டும் என்று சொன்னவுடன், தசரதன் தயங்குகின்றான். எத்தனையோ காலமாக தவம் இருந்து பெற்ற பிள்ளை இராமன். அந்த சின்னஞ் சிறு பாலகனை, கொடிய அரக்கர்களை அழிப்பதற்கு அனுப்புவதா என்று தயங்குகின்றான். அவன் தயங்கத் தயங்க விஸ்வாமித்திரரின் கோபம் ஏறுகிறது.

முனிவரை சமாதானப்படுத்த, ‘‘நான் வருகின்றேன். அவன் 16 வயதும் நிரம்பாத பாலகன். அவன் வந்தாலும் உங்களுக்குப் பயன்படமாட்டான். நான் பத்து திசைகளையும் வென்றவன் ஒப்பற்ற படைபலம் மிகுந்தவன் ஆகையினால் நான் வந்து உங்களுடைய வேள்வியைக் காக்கின்றேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்’’ என்று சொல்கின்றான். அப்பொழுது விஸ்வாமித்திரர் ஒரு வரி சொல்லுகின்றார்.

‘‘தசரதா! ராமன் யார் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்? ராமனை நீ அறியமாட்டாய். ஆனால், நான் அறிவேன். இந்த வசிஷ்டர் அறிவார். இங்குள்ள தவவலிமை மிக்க முனிவர்கள் அறிவார்கள்.’’ என்று வசிஷ்டரை அந்த சபையிலே ராம அவதார ரகசியத்தை தெரிந்தவர் என்று காட்டிக் கொடுக்கிறார் விஸ்வாமித்திரர்.

தொகுப்பு: தேஜஸ்வி

Related posts

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

கிறிஸ்தவம் காட்டும் பாதை