Saturday, October 5, 2024
Home » இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Porselvi

வள்ளலார் அவதார தினம்
5.10.2024 – சனி

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி அருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
என்று சொல்லி ஆன்மநேய ஒருமைப்பாடு தழைக்கவும், இவ்வுலக மெல்லாம் உண்மை நெறி பெற்றிடவும், எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்ற கொள்கையை பரப்ப இவ்வுலகில் இறைவனால் அனுப்பப்பட்ட அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார். 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் சிதம்பரம் அருகே மருதூர் எனும் சிற்றூரில் அவதாரம் செய்தார். அவர் நமக்காக அருளிய அருட் பாடல்களே திருவருட்பா என்று போற்றப்படுகிறது. அவருடைய அவதார தினத்தன்று வடலூரில் காலை முதல் இரவு வரை பல ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். அவருடைய அவதார நாளில் விளக்கு ஏற்றி அருட்பெருஞ்ஜோதியை வணங்குங்கள்.

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை
5.10.2024 – சனி

புரட்டாசி மாதம் முழுக்கவே பெருமாளுக்கு, அதுவும் திருவேங்கடமுடையானுக்கு உரியது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் பெருமாளுக்கு தளிகைபோட்டு, வழிபடும் வழக்கம் உண்டு. சிலர் பாதயாத்திரையாக திருமலைக்குச் செல்வதும் உண்டு. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்ய காரியத் தடைகள் விலகும். சனிதோஷங்களான அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, கண்டச்சனி, அர்தாஷ்டமச்சனி முதலிய கோசார தோஷங்களும், சனி திசா புத்தி தீய விளைவுகளும் அகலும். அன்றைய நாளில் நாம் திருவேங்கடமுடையானை மனதார வழிபட்டு நம்முடைய பிரார்த்தனைகளை விண்ணப் பித்தால் கண்டிப்பாக பெருமாள் சகல காரியங்களிலும் நமக்கு வெற்றி அடையச் செய்வார். அதுவும் இந்த வாரம் மூன்றாவது சனிக்கிழமை ஒற்றைப்படையில் வருவதால் கடந்த இரண்டு வாரங்கள் தளிகை போடாத அன்பர்கள் (மஹாளயம் இருந்ததால்) இந்த வாரம் திருவேங்கடமுடையானை நினைத்து விரதமிருந்து தளிகை போட்டுப் படைக்கலாம்.

எட்டுக்குடி வான்மீக சித்தர் பூஜை
7.10.2024 – திங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோயில். புகழ் பெற்ற மிக பழமையான முருகன் கோயில்களில் எட்டுக்குடி முருகன் கோயிலும் ஒன்று. அருணகிரிநாதர் இக்கோயில் குறித்து பாடல் இயற்றியுள்ளார். எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார்.வான்மீக சித்தர்க்கு எட்டுக்குடியில் உள்ள முருகன் கோயிலில் ஜீவசமாதி உள்ளது. இங்குள்ள வன்னி மரத்தடியில் சமாதி பெற்றுள்ளார். வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவரை சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார். போகர் 7000-எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழுநூறு க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வாழ்ந்ததாகவும். காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர்.

லலிதா பஞ்சமி
7.10.2024 – திங்கள்

சக்தியின் பல வடிவங்களின் ஒரு வடிவம் தான் லலிதாம்பிகை. அவர் தோன்றிய புண்ணிய தினம் தான் சுக்ல பட்சத்தின் 5 ஆம் நாள் பஞ்சமி திதி. அந்த நாளை தான் நாம் லலிதா பஞ்சமி என்று கொண்டாடுகிறோம். இதை பெரும்பாலும் உபாங்க லலிதா விரதம் என்று பக்தர்கள் கடை பிடிக்கின்றனர். தசமஹா வித்யாக்களில் அன்னை லலிதாம்பிகை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை சோடசி என்றும் திரிபுரசுந்தரி என்றும் போற்றுகின்றனர். நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னை லலிதாம்பிகையை நாம் மனதார வழிபடுவதால் நல் அறிவையும், மகிழ்ச்சியையும், நல்ல உடல் நலத்தையும் நமக்கு அருள் புரிவார். பெரும்பாலும், லலிதா பஞ்சமி வட மாநிலங்களில் குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். அன்றைய நாளில் லலிதா சகஸ்ரநாமம் முழுக்க பாராயணம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும். திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே இருக்கும் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் வெகு விமர்சையாக லலிதா பஞ்சமியை கொண்டாடுவார்கள். அன்று காலை முதலே அன்னைக்கு சிறப்பு அலங்காரம், தொடர் லலிதா சகஸ்ரநாம பாரா யணங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீபாராதனை பிரசாதம் வழங்குவார்கள் பஞ்சமி நாளன்று முழுவதுமாக விரதம் இருந்து லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகத்தையாவது மனதார படித்து வழிபட்டு வந்தால் நமது காரியங்களை எல்லாம் அன்னை வெற்றி அடையச் செய்வார்.

சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர்
குரு பூஜை 8.10.2024 – செவ்வாய்

அருட்சித்தரான மாயாண்டி சுவாமிகள் கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் சென்று திருவருள் பெற்று அற்புதங்கள் பல ஆங்காங்கே நிகழ்த்திக் காட்டியருளினார்கள். தென்பதிகளை அவர் தரிசிக்கச் சென்றபோது அப்போதைய இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதியும், சுவாமிகளை வரவேற்று நல்லாசியும் வாழ்த்துக்களும் பெற்றார்கள். அனைவராலும் சற்குரு மாயாண்டி சுவாமிகள் என போற்றப்பட்ட இவர் கட்டிக்குளத்திற்கு மேற்கே கருப்பனேந்தலில் தியானத்திருமடம் ஒன்றை உருவாக்கியருளினார்கள். அம்மண்டபம் ஞானபீடமாகப் புகழ் பெற்றது. அருட் சித்தரான அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகளின் குரு பூஜை விழா மதுரை திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுவாமியின் ஜீவசமாதி திருக்கோயிலில் இன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

திருமலை பிரமோற்சவம் காலை மோகினி அவதாரம் – இரவு கருட சேவை
8.10.2024 – செவ்வாய்

திருமலை புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை திருவேங்கடமுடையான் மிகவும் அழகான மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் கோலம்) தோன்றி பக்தர்களுக்கு அருள்புரிவார் கண்களை கவரும்பட்டாடைகளை உடுத்தி ஜொலிக்கும் நகைகளை அணிந்து வசீகரமாக வலம் வருவார். மாலை திருவேங்கடமுடையான் தங்க கருட வாகனத்தில் எழுந்து மாட விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பெருமாள் எத்தனையோ வாகனத்தில் எழுந்தருளினாலும் கருட வாகனத்தில் பெருமாளை சேவிப்பது மிகவும் சிறப்பானதாகும். காரணம் வேதம்தான் கருடன் வேதத்தில் உச்சிபாகமான உபநிடத பிர்மம் தான் திருவேங்கமுடையான். அதனால்தான் பெரியாழ்வார் கருட சேவையை நிறைவாகப் பாடுகிறார்.பறவையேறு பரமபுருடா! நீஎன்னைக் கைக்கொண்டபின் பிறவியென்னும் கடலும்வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால் இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால் அறிவையென்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே.மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிவலம் வந்தாலும் பிரமோற்சவ காலத்தில் தங்க கருட வாகனத்தில் சுவாமியை நாம் தரிசிப்பது மிகவும் சிறப்பு. இதனாலேயே திரு மலைக்கு கருட சேவை அன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசிக்க வருகின்றனர். இரவு ஏழு மணி தொடங்கி இரவு 12.30 இந்த அற்புதமான தங்க கருட சேவையானது இந்த வருடம் அக்டோபர் மாதம் எட்டாம் தேதி மாலை நடைபெற இருக்கின்றது.

திருமலை – அனுமந்த வாகனம்
தங்கத்தேர் 9.10.2024 – புதன்

திருமலை பிரமோற்சவத்தின் ஆறாம் நாள் உற்சவம் காலையில் திருமலை அப்பன் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஹனுமன் தன் இரு கரங்களின் மேலே பெருமாளைத் தாங்கியபடி மாட வீதிகளில் வலம் வரும் காட்சி அற்புதமாக இருக்கும். திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக தன் பக்தர்களுக்கு அனுமான் இதை வெளிப்படுத்துகின்றார். திரேதா யுகத்தில் ராமனாகவும் துவாபாரயுகத்தில் கிருஷ்ணராகவும் அவதரித்த ஸ்ரீமன் நாராயணன் கலியுகத்தில் வெங்கடேஸ்வரராக அவதரித்ததை இந்த வாகன சேவை நமக்கு நினைவூட்டும் அனுமன் தான் ஒரு சிறந்த அடியார் அவர்தான் ஒரு முழுமையான பக்தனின் அடையாளம் என்று தாளபாக்க அன்னமாச்சார்யா தன்னுடைய பாடலில் அருமையாக கூறுகிறார். இன்று மாலை தங்கத் திருத்தேரில் உபய நாச்சிமார்களுடன் திருவேங்கடமுடையான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று இரவு சுமார் 8 மணிக்கு மேல் தங்க யானை வாகனத்தில் சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளிப்பார்.

துர்காஷ்டமி
10.10.2024 – வியாழன்

நவராத்திரியின் எட்டாவது நாளை நாம் துர்காஷ்டமி என்று கொண்டாடுகிறோம். அன்றைய தினம் சப்த கன்னிகைகள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றும் அற்புத நாளாகும். சண்டன் முண்டன் ரக்த பிஜன் என்ற வரபலமிக்க அசுரர்களை அழிக்க துர்க்கை அன்னை தன்னுடைய நெற்றியில் இருந்து உக்கிர சக்தியை உண்டாக்கினார். அந்தச் சக்தியை உண்டாக்கிய தினம் தான் துர்காஷ்டமி தினம். இன்றைய தினத்தில் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட்டு வந்தால் பன் மடங்கு நற்பலன் நமக்கு கிடைக்கும் என்று சொல்வார்கள். அம்பாளுக்கு முல்லை, வெண்தாமரை, மல்லிகை போன்ற மலர்களை சமர்ப்பித்து துர்கா அஷ்டகங்களை படித்து மனதார அன்னையை வழிபட வேண்டும்.

பத்ரகாளி ஜெயந்தி
10.10.2024 – வியாழன்

துஷ்டர்களைஅழிக்கவும் பக்தர்களை காக்கவும் அன்னை பராசக்தி பல அவதாரங்களை எடுத்தார். அதில் ஒன்றுதான் காளி அவதாரம். பொதுவாகவே காளி என்பவள் கரியவள், கருப்பு நிறம் உடையவள் என்று சொல்வார்கள். சாத்த பிரிவினர்கள் வணங்கும் பெண் தெய்வங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவள் இந்த பத்ரகாளி. எப்பொழுதுமே கண்களில் கோபம் தெறிக்க கைகளில் ஆக்ரோஷமாக சூலத்தை பிடித்து காலின் கீழே ஒரு அசுரனை மிதித்து வதம் செய்யும் கோலம் தான் இவளுடைய திருக்கோலம். அன்னையின் கழுத்தில் எப்பொழுதும் மண்டை ஓடு மாலை அணிவித்து இருப்பார்கள். இவள் எதிரிகளுக்கு மிகவும் முரட்டுத்தனமாக காட்சியளித்தாலும் தன்னை நம்பி வந்த பக்தர்களுக்கு சாந்த சுவையாக காட்சி அளிப்பார். நமக்கு பிடித்திருக்கும் சனி தோஷங்களை நிவர்த்தி செய்வதில் பத்ரகாளிக்கு பெரும் பங்கு உண்டு. பொதுவாகவே பத்ரகாளி ஜெயந்தி நள்ளிரவு நேரத்தில் பல காளி கோயில்களில்
சிறப்பாக கொண்டாடுவார்கள்.

ஆயுத பூஜை
11.10.2024 – வெள்ளி

நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்கா தேவியின் 9 வடிவங்களை நாம் வழிபடுகின்றோம். அதில் ஒன்பதாவது நாள் மகா நவமி தினம்தான் சரஸ்வதி பூஜையாகவும், ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகின்றது. நம் வீட்டையோ, தொழில் செய்யும் இடத்தையோ சுத்தப்படுத்தி மாவிலை தோரணங்கள், வாழைமரம் போன்றவற்றை கட்டி அலங்காரம் செய்து மாலை நேரத்தில் வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் நமது வாகனங்கள் அனைத்தையும் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வணங்க வேண்டும். தொழில் செய்யும் இடமாக இருந்தால் கட்டாயம் அன்றைய தினம் அனைத்து கருவிகளையும், சுத்தப்படுத்தி மஞ்சள், குங்குமம் வைத்து மலர்களைக் கொண்டு இறைவனுக்கு முன் வைத்து வணங்கி தேவிக்குரிய ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். கலைகள் சம்பந்தப்பட்ட கருவிகள் இருந்தால் கட்டாயம் அன்று பூஜையில் வைக்க வேண்டும். அனைவர் வீட்டிலும் அன்று ஒரு புத்தகமாவது சுவாமியின் முன் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பூஜையில் வைத்த கருவிகளோ, புத்தகங்களோ அன்று இரவு முழுக்க எடுக்கக்கூடாது. மறுநாள் விஜய தசமி என்று சந்தனம் தெளித்து சாம்பிராணி புகை போட்டுபுனர்பூஜை செய்து தூபங்களை காட்டித்தான் பொருட்களை நாம் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

(சில ஆலயங்களில் மகாநவமி 12ம் தேதி சனிக் கிழமையும், விஜயதசமி 13ம் தேதி ஞாயிறும் அனுசரிக்கப்படுகிறது. அவரவர் வழக்கப்படி பெரியோர்களிடம் கேட்டுச் செய்யவும்).

6.10.2024 – ஞாயிறு – சதுர்த்தி விரதம்.
8.10.2024 – செவ்வாய் – சஷ்டி விரதம்.
10.10.2024 – வியாழன் – கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.
11.10.2024 – வெள்ளி – ஏனாகதி நாயனார் குருபூஜை.
11.10.2024 – வெள்ளி – திருமலை பிரமோற்சவம் திருத்தேர்.

You may also like

Leave a Comment

ten − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi