விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பைக் மாயமான விவகாரம் 3 போலீசார் சஸ்பெண்ட்

சென்னை: விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இருசக்கரவாகனம் மாயமான விவகாரத்தில் 3 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து கோயம்பேடு துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசாரால் குற்ற வழக்கு தொடர்புடைய மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் காவல் நிலைய வளாகம் மற்றும் அது ஒட்டிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த 27ம் தேதி மேற்கு இணை ஆணையர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது குற்ற வழக்கு மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படி அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து பைக்குகளை வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

பின்னர் வாகனத்தை இறக்கும் போது கணக்கெடுப்பின் போது காவல் நிலையத்தில் இருந்த வாகனங்களை விட மைதானத்தில் இறக்கி வைக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால், காவல் நிலைய போலீசரிடம் விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் இருந்த இருசக்கர வாகனங்களை முறைப்படி அப்புறப்படுத்த இணை ஆணையர் உத்தரவிட்டிருந்த நிலையில் காவல் நிலையத்திற்கு தெரியாமல் 4 விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கியர் சைக்கிள் ஆகியவை சரக்கு ஆட்டோ மூலம் திருடி சென்ற மூன்று காவலர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் நேற்று வெளியிட்டது. மேலும் உயர் அதிகாரிகள் விசாரணையில் காவல் நிலைய எழுத்தர் ஜெகன், சத்திய பிரபு, மணி ஆகிய மூன்று காவலர்கள் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடி மெக்கானிக் ஷெட்டில் மறைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் ஜெகன், சத்திய பிரபு, மணி ஆகிய மூவரையும் பணியிட நீக்கம் செய்து கோயம்பேடு துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!