விருதுநகர் நகராட்சியில் தெருவில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருதுநகர்: விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட அய்யன் தெருவில் 3 மாதங்களாக ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் நகராட்சி 28வது வார்டுக்கு உட்பட்டது ம.கு.அய்யன் தெரு. இங்கு 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றன. பின்பு, அங்குள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள முதல் பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து இரண்டாவது தொட்டிக்கு கழிவுநீர் செல்லவில்லை.

இதன் காரணமாக, கழிவுநீர் சீராக செல்லாமல், முதல் தொட்டி வழியாக தொடர்ந்து கழிவுகள் வெளியேறி வருகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த மூன்று மாதமாக கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. பள்ளி குழந்தைகள் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தோம். நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவர் ஆய்வு செய்தனர்.

கழிவுநீர் குழாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். ஆனால் 3 மாத காலமாகியும் நடவடிக்கை இல்லை. தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடையில் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இரண்டு மேனுவலுக்கு இடையில் உள்ள குழாய் உடைந்துள்ளது. இதை சாலையை தோண்டி பழுதுநீக்க வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் உடனடியாக செய்ய இயலவில்லை. விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related posts

45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை: பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை