விராலிமலை முருகன் கோயிலில் 2 லிப்ட்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

*வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

விராலிமலை : விராலிமலை முருகன் கோயிலில் 2 லிப்ட்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது விராலிமலை முருகன் கோயிலாகும். இங்கு மலைமேல் முருகன், வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அருணகிரிநாதருக்கு முருகன் காட்சி தந்து திருப்புகழ் பாடவைத்த தலமாகவும், நாரதருக்கு பாவ விமோச்சனம் தந்த தலமாகவும் இது விளங்குகிறது. நகரின் மத்தியில் வனங்கள் சூழ அமைந்துள்ள இக்கோயில் 227 படிகளை கொண்டுள்ளது. இதனால் பக்தர்களின் வசதிக்காக ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மலைப்பாதை மற்றும் மலைமேல் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரண்டு மற்றும் நான்குசக்கர வாகனங்கள் மூலம் பயணித்து எளிதாக மேலே சென்று முருகனை தரிசிக்கின்றனர்.

மேலும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து 2 லிப்ட் அமைக்கும் பணி 2021ம் ஆண்டு துவங்கப்பட்டது. மலைமேல் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து வயதான பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள் மணிமண்டபம் வரை செல்லும் வகையில் 2 மின்தூக்கிகள் நிறுவப்பட்டது.

ஒரு லிப்ட்டுக்கு 8 பேர் என 16 பேர் வரை பயணம் செய்யும் வகையில் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், மின் இணைப்பும் வழங்கப்பட்டு தற்போது லிப்ட் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து லிப்ட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள், சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு

ரூ.1 கோடியில் புதுப்பொலிவு பெறும் அருங்காட்சியகம் கோட்டையில் சுற்றுலா பயணிகளை கவரும் தத்ரூப டைனோசர்

ரயில், விமான டிக்கட் முன்பதிவு உட்பட ஒரே மொபைல் ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் : தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்