தேர்தல் விதி மீறி இலவச தையல் பயிற்சி டோக்கன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மீது வழக்கு பதிவு: பறக்கும்படை புகாரில் நடவடிக்கை

சென்னை: தேர்தல் விதி மீறியதாக பறக்கும் படையினர் அளித்த புகாரின்பேரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, மகளிர் தின விழா நடத்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் கோயம்பேடு காவல் நிலைய போலீசாரிடம் தேமுதிகவினர் அனுமதி கேட்டனர். தேர்தல் தேதி அறிவித்த நிலையில் அனுமதி அளிக்க போலீசார் மறுத்தனர். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மகளிர் தின விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் தேமுதிக பொதுச் செயளார் பிரேமலதா கலந்துகொண்டு மகளிருக்கு சான்றிதழ்களை வழங்கினார். சுமார் 300க்கும் மேற்பட்ட மகளிருக்கு இலவசமாக தனியார் நிறுவனம் மூலம் ஆறு மாதம் தையல் பயிற்சிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் தேமுதிக அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், எப்படி நிகழ்ச்சி நடத்தலாம் என்று கேள்வி எழுப்பினர். அப்போது தேமுதிக நிர்வாகிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்கள் கட்சி அலுவலகத்தில் நிகழ்ச்சி நடத்துகிறோம், என்றனர். இதையடுத்து, இலவச டோக்கன் வழங்கப்பட்டது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக தொழிற்சங்க செயலாளர் காளிராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சத்தியநாராயணன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Related posts

தங்கை இறந்த சோகம்: அண்ணன் தற்கொலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு