வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும்! : ஹரியானா அரசு அறிவிப்பு!

சண்டிகர் : வினேஷ் போகத்தை பதக்கம் வென்ற சாதனையாளராக வரவேற்போம் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. மகளிருக்கான 50 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில், முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட 100 கிராம் கூடுதல் எடை இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து பாரீசில் உள்ள விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளதால், நடுவர் மன்ற முடிவு பற்றி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்று ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். நாடு திரும்பும் வினேஷ் போகத்துக்கு, வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு வழங்கப்படும் வரவேற்பும், மரியாதையும் வழங்கவும், வெகுமதி மற்றும் வசதிகள் செய்து தருவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சாதனையாளருக்கான பரிசுத்தொகை வினேஷ் போகத்திற்கு வழங்கப்படும் என்றும் ஹரியானா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Related posts

கட்டிமேடு அரசுபள்ளியில் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 118 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து