மல்யுத்த வீராங்கனை வினேஷ் தகுதி நீக்கத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் : பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பாரீஸ் : இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரை அளித்துள்ளார். பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் (29 வயது), பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார். இந்த நிலையில், 50 கிலோவை விட 100 கிராம் கூடுதலாக இருந்ததால் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் என ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில, ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வினேஷ் போகத்.. நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன். இந்தியாவின் பெருமை, ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர். உங்களுடைய இந்த பின்னடைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. என்னுடைய வருத்தத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.
சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் உங்கள் இயல்பு. இதிலிருந்து மீண்டு வலிமையாக வாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார். மேலும் வினேஷ் தகுதி நீக்கத்துக்கு இந்திய ஒலிம்பிக் கமிட்டி தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவிக்க வேண்டும் எனவும் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் வினேஷ் போகத் முன் உள்ள வாய்ப்புகள் குறித்து பி.டி.உஷாவிடம் கேட்டறிந்த பிரதமர், அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு