விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது :காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது” என்று காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஆர்.கே.சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் அமர்வு முன்பு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

மேலும் வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் மனு பரிசீலிக்கப்படும் எனவும் தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி இல்லை என்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மக்கும் நிலையில் உள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது என்றும் அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி,பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்