விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் கேரள மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறி உள்ளது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் ரூ.8,677 கோடி மதிப்பில் வர்த்தக துறைமுகத்திற்கான முதல் கட்டப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. அதானி குழுமத்துடன் இணைந்து கேரளா மற்றும் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் இந்த துறைமுகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் சீனாவில் இருந்து 2000க்கும் அதிகமான கன்டெய்னர்களுடன் சான் பெர்னாண்டோ என்ற முதல் சரக்கு கப்பல் வந்தது. இதில் வந்த 1930 கன்டெய்னர்கள் அன்று துறைமுகத்தில் இறக்கப்பட்டன.

இந்தக் கப்பலுக்கான வரவேற்பு விழா நேற்று விழிஞ்ஞம் துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் ஒன்றிய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் உலக வரைபடத்தில் இந்தியா இடம்பிடித்து உள்ளது. கேரள மக்களின் நீண்ட கால கனவு தற்போது நிறைவேறி உள்ளது. துறைமுகப் பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற துறைமுகங்கள் உலகிலேயே மிகவும் குறைவாகவே உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் தான் பெரும் பங்கு வகிக்கின்றன. இது கேரளாவுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் பெருமை தருவதாகும். தாய் கப்பல்கள் என அழைக்கப்படும் மிக பெரிய சரக்கு கப்பல்கள் விழிஞ்ஞத்திற்கு வருகின்றன. தற்போது இந்த துறைமுகத்தில் சோதனை ஒட்டம் நடைபெறுகிறது என்றாலும் விரைவில் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும். 2045ல் இது முழு செயல்பாட்டுக்கு வரும் என்றுதான் முதலில் கருதப்பட்டது. ஆனால் அதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வர உள்ளது. 2028ல் விழிஞ்ஞம் துறைமுகம் முழுமையான பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

யாகி புயல் கரையை கடந்த பிறகும் வியட்நாமில் தொடரும் கனமழை பலி எண்ணிக்கை 59 ஆனது: பாலம் இடிந்தது, வெள்ளத்தில் பஸ் அடித்து செல்லப்பட்டது

சவுதி, கத்தார் அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு இந்திய அரசியலில் அன்பு, மரியாதை இல்லை