பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு வழக்கு 7ம் தேதி வரை தினசரி விசாரணை: விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: ‘பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் வரும் 7ம் தேதி வரை தினசரி விசாரணை நடைபெறும்’ என விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதற்காக முன்னாள் செங்கல்பட்டு எஸ்பிக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 பேரும் தனித்தனியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி தாக்கல் செய்த ராஜேஷ்தாசின் மனுவை உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, புதிதாக திறக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி ராஜேஷ்தாஸ் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக கடந்த விசாரணையின் போது விழுப்புரம் நீதிமன்றத்தில் தெரிவித்து அவகாசம் கேட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி நேற்றைய தினம் வழக்கு ஒத்திவைத்து வாதத்தை தெரிவிக்குமாறு, இல்லையென்றால் நீதிமன்றமே மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதிட நடவடிக்கை எடுக்கும் எனக் கூறி உத்தரவிட்டார். அதன்படி நேற்று மீண்டும் வழக்கு நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகினார். இந்த வழக்கில் தானே வாதிட அனுமதிக்க வேண்டுமென நீதிபதியிடம் டிஜிபி கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜேஸ்தாசை வாதிட அனுமதித்தார். தொடர்ந்து சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சுமார் ஒரு மணி நேரம் வாதாடி தனது தரப்பு விளக்கத்தை நீதிபதியிடம் முன் வைத்தார். இதனைதொடர்ந்து நீதிபதி பூர்ணிமா வரும் 7ம் தேதி வரை தினசரி உணவு இடைவேளைக்கு பிறகு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வாதிட அனுமதி அளித்து இன்றைக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

போக்குவரத்து பணிமனை உணவகங்களில் தரமான உணவு வழங்க தொழிலாளர்கள் வலியுறுத்தல் : பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை!!

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்