விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

*உற்சாகமாக வந்த மாணவ, மாணவிகள்

*பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கோடைவிடுமுறைக்குப்பின் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.தமிழகத்தில் கடந்த 2022-23 கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் இறுதியில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் 6 முதல் 12ம் வகுப்பு வரை நேற்றையதினமும், எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை நாளைய தினம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரமாக பராமரிக்கும் வகையில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணியை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசுப்பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், நிதி உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளிகள், பகுதிநேர நிதி உதவி பள்ளிகள், சிறப்பு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 1,806 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வளாகம், வகுப்பறை, ஆய்வகம், ஆசிரியர், தலைமை ஆசிரியர் அறை, கணினி அறை, குடிநீர் தொட்டி, கழிவறை உள்ளிட்ட அனைத்தும் தூய்மைப்பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுமுடிந்துள்ளன.

இதனிடையே கோடைவிடுமுறைக்குப்பின் நேற்று மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்துகொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பள்ளிக்கு வந்த முதல்நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6ம்வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு இனிப்பு மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

இதில் வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டார ஆசிரியர் பயிற்றுநர் கோகிலா, பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி, உதவி தலைமை ஆசிரியர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தட்சிணாமூர்த்தி கலந்துகொண்டார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!