விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் மரத்தில் ஏறி மாணவர்கள் ஆபத்தான விளையாட்டு

*ஆசிரியர்கள் அலட்சியத்தால் விபரீதம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் மரத்தில் ஏறி மாணவர்கள் ஆபத்தான முறையில் விளையாடி வருகின்றனர். ஆனால் ஆசிரியர்கள் இதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் அரசு பள்ளிகளும், கிராமப்புறங்களில் இருந்து ஏழை எளிய மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் வீட்டில் பெற்றோருடன் அதிக நேரத்தை கழிப்பதைவிட பள்ளியில் ஆசிரியர்களுடன் தான் அதிக நேரம் பயணிக்கின்றனர்.

பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பொறுப்பாகும். ஆனால் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் அலட்சியத்தால் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.

விழுப்புரம் அருகே வளவனூர் பேரூராட்சி வி.தொட்டி ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நிழல் தரும் மரங்கள் அதிகளவு உள்ளது. இடைவேளை, மதிய உணவு இடைவேளையில் மாணவ, மாணவிகள் மரத்தின் உச்சிக்கு சென்று விளையாடுவதும், ஆபத்தான இந்த சாகச விளையாட்டில் ஈடுபடுவதால் அவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் விபரீதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்து பெற்றோரும் ஆசிரியர்களிடம் தெரிவித்தாலும், அவர்கள் நாங்கள் ஏதும் கண்டிக்க முடியாது என்று கூறி அலட்சியப்படுத்தியுள்ளார்களாம். இதனால் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் முன்னிலையில் மரத்தில் ஏறி ஆபத்துடன் விளையாடிக்கொண்டு வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன்பு கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக 100 பேரிடம் மோசடி

தமிழ்நாட்டில் இன்று, நாளை, ஜூலை 16-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,600 ஆக விற்பனை