அவுட்ஃபிட் ஃபிரம் ஸ்கிராட்ச்! : ஒரு கிராமத்து டிசைனரின் கதை!

நான்சி த்யாகி … பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக ஏன் அவர்களே அசந்து போகும் அளவிற்கு உடைகள் டிசைனிங்கில் மாஸ் காட்டும் 21 வயது மங்கை. நாமெல்லாம் இன்ஸ்டாகிராம், யூடியூப் என வெறுமனே நாம் ரீல்ஸ், வீடியோக்கள் பார்த்துப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்க நான்சி த்யாகியோ வேறு ஒரு களத்தில் யோசித்து 100 நாட்கள் ‘Outfit From Scratch’ (அடிப்படையிலிருந்து உடைகள்) என்னும் கான்செப்ட்டைக் கையில் எடுத்துக்கொண்டு இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். ‘ பொருளாதாரம், அறிவு என எதிலும் அப்பாவின் ஆதரவு இல்லாத நான்சிக்கு சொந்த ஊர் உத்திரபிரதேசம், பக்பத் மாவட்டம், பரன்வா கிராமம். ஒரே குடும்பத் தலைவியாக நான்சியின் அம்மா தான் நாள் முழுக்க அங்கே இருக்கும் ஃபேக்டரியில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார்.

நான்சிக்கு ஒரு தம்பி. ஆனால் அம்மாவின் வேலைக்குப் பிரச்னையாக வந்தமைந்தது கொரோனா காலமும், ஊரடங்கும். ஃபேக்டரி செயல்படவில்லை, சம்பளமும் இல்லை. ஆனால் வேலைப் பார்த்ததற்கு பரிகாரமாக கையில் 3 லட்சத்தைக் கொடுத்து நான்சியின் தாய் உட்பட அனைவரையும் வேலையை விட்டு அனுப்பியது அவர் வேலை செய்த தொழிற்சாலை. கைகளில் 2.5லட்சம் அதுவும் முழுக்க நான்சியின் யுபிஎஸ்சி படிப்பிற்காக செலவிட முடிவு செய்தார் நான்சியின் தாய். ஆனால் அதற்கும் வழி விடாமல் சோதித்தது ஊரடங்கு காலம். இந்த இடைவேளைதான் நான்சிக்குக் கைகொடுத்தது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள். ஆரம்பத்தில் தன் கையாலேயே உடைகள் தைத்து அணிந்துகொண்டு ரீல்ஸ்களாக பதிவேற்றம் செய்துவந்தார் நான்சி. அவருடைய மூலதனம் அருகாமையில் இருக்கும் ரோட்டோர பிட்டு துணிகளின் வீண் கழிவுகள்தான். ஆனாலும் என்னதான் உடைகள் அணிந்து புகைப்படமாக, ரீல்ஸ்களாக பதிவேற்றினாலும் பெரிதான வரவேற்புகள் இல்லை’ இவ்வேளையில்தான் நான்சி குடும்பம் பிழைப்பிற்காக டெல்லி பயணமானார்கள். அந்தப் பயணம் இன்னும் பல கதவுகளை நான்சிக்கு திறந்தன.

‘ டெல்லியின் ரோட்டோர மெட்டீரியல்கள், துணிகள் கடைகள் பல ஆலோசனைகளையும் வாரி வழங்கின. 2.5 லட்சம் ரூபாயையும் சற்றும் யோசிக்காமல் ஒரு நல்ல கேமரா மற்றும் வீடியோ ஷூட் செய்யும் கருவிகள் என வாங்கித் தன் அன்னையின் கோபத்திற்கு ஆளானார். ஆனால் நான்சி தன் செலவிலேயே இந்த 2.5 லட்சம் மட்டுமல்ல , இதற்கு மேலும் வருமானம் ஈட்ட முடியும் என்னும் தன்னம்பிக்கையுடன் வெறுமனே வீடியோவாக இல்லாமல் தன் கையாலேயே துணிகள் வாங்குவதையும், குறிப்பாக இதெல்லாம் நமக்கு எட்டாக் கனி என பாலிவுட் நடிகைகள் திரைப்படங்களில் , நிகழ்ச்சிகளில் அணிந்து வரும் உடைகளை டிசைன் செய்து அதனையும் ஷூட் செய்தார். இதற்கெல்லாம் உதவியாக இருந்தவர் நான்சியின் தம்பி. நான்சி என்ன செய்தாலும் வீடியோவாக எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த உடைகள் டிசைனிங்கில் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை. கடைக்குச் சென்று மிகச்சரியான துணிகளை தேர்வு செய்து வாங்குவது முதல் தொடர்ந்து டிசைன் செய்து அதனை தைத்து அணிவது வரை, அனைத்தையும் ஒன்றிணைத்து 100 உடைகள் ‘அவுட்ஃபிட் ஃபிரம் ஸ்கிராட்ச்’ என்னும் கான்செப்ட்டை உருவாக்கி ஐஸ்வர்யா ராய், தீபிகாபடுகோன் உட்பட அத்தனை பிரபலங்களின் உடைகளும் நான்சியின் எளிமையான டிசைனிங் ஸ்டூடியோவில் உருவாகின. இதற்கு தன்னுடைய பொம்மைகளுக்கு நன்றி சொல்கிறார் நான்சி.

‘சிறுவயதிலிருந்தே என்னுடைய பொம்மைகள், பழைய பார்பிகள் என எது கிடைத்தாலும் அவற்றிற்கு வீட்டில் இருக்கும் பழைய வீணான துணிகளைக் கொண்டு உடைகள் தைத்துப் போட்டுவிடுவதுதான் என்னுடைய குழந்தைப் பருவப் பொழுதுபோக்கு. ஆனால் அப்போதெல்லாம் தெரியாது என்னுடைய எதிர்காலத்தின் துவக்கமே இதுதான் என. என்னுடைய இந்த வளர்ச்சிக்கு முதல் உதவியாக இருந்தவைகள் என் பொம்மைகள். பிறகு என் அம்மாவும், தம்பியும்தான். ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு வேலையா என அம்மா கோபப்பட்டாலும் பின்னர் இதிலும் சாதிக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டு அவரும் உதவி செய்யத் துவங்கிவிட்டார். இடையில் டெல்லி என் அம்மாவுக்கு ஒரு நல்ல வேலையும் பெற்றுத் தர, முன்பு போல் உடல் வறுத்தி உழைக்க வேண்டாம் என என்னுடைய வருமானத்தில் வீட்டைக் கவனிக்கத் துவங்கிவிட்டேன்’ என்னும் நான்சி யூடியூபில் தனக்கென ஒரு சேனல் துவங்கி அங்கே தனது வீடியோக்களை பதிவிட யூடியூப் மூலமும் வருவாய் வரத் துவங்கிவிட்டது.

‘டெல்லியின் முன்னணி ஃபேஷன் நிகழ்வுகள் ஆரம்பத்தில் போட்டியாளராகக் கூப்பிடத் துவங்கி, தற்போது நான்சியை சிறப்பு விருந்தினராகக் கூப்பிட ஆரம்பித்துவிட்டனர். பல இளைஞர்கள் முன்னேற்ற நிகழ்வுகளில் நான்சி பேச்சாளராக இருக்கிறார். 21 வயதில் தற்போது டிஜிட்டல் கிரியேட்டர் மற்றும் தொழில் முனைவோராகவும் உயர்ந்திருக்கிறார். தற்போது அம்மாவின் ஆசைப்படி யுபிஎஸ்சி படிப்பையும் இன்னொரு புறம் தொடர்ந்து வரும் நான்சிக்கு அதில் ஜெயித்து ஒருவேளை வேலை கிடைத்தால் கூட இப்போது வரும் வருமானம் மூன்று, நான்கு மடங்கு அதிகம் என்பதுதான் சிறப்பான தகவல். ஆனாலும் அம்மா பட்ட கஷ்டம் பார்த்து வளர்ந்த நான்சி அதையும் ஒரு கைப் பார்க்கத் தயாராகி வருகிறார்.

‘நான் முறைப்படி தையல் வகுப்புக்குக் கூட செல்லவில்லை. எந்த யூடியூப் எனக்கு இன்று வருமானம் கொடுக்கிறதோ அதே யூடியூப்தான் ஒரு காலத்தில் என்னுடைய தையலுக்கும் ஆசிரியர். ஆரம்பத்தில் என்னுடைய வீடியோக்களுக்கு டிரோல்களும், கிண்டல்களும் நிறைய வந்தன. எப்போது ஒரு உடை எப்படி உருவாகிறது என்னும் முழுமையான வீடியோவுடன் பகிரத் துவங்கினேனோ அப்போதே பார்வையாளர்கள் என்னைக் கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டு, என்னுடைய திறமையைக் கண்டு பாராட்டத் துவங்கி விட்டனர். இதோ இப்போது இன்னும் இரண்டு சேனல்கள் ஃபேஷன் அடிப் படையிலேயே துவங்க இருக்கிறேன்’ என்னும் நான்சி ‘வெறுப்புகளை விருப்பமாக பெற்றுக்கொள்ளுங்கள், வெற்றி நிச்சயம். டிஜிட்டலில் உங்களின் வண்ணமயமான முடிவுகளை மட்டும் காட்டுவதை விட எப்படி அது உருவானது என உங்கள் திறமையுடன் சேர்த்து பதிவிட்டுப் பாருங்கள், பலன் அதிகம் கிடைக்கும்’ என்கிறார் இந்த கிராமத்து டிஜிட்டல் டிசைனர் நான்சி த்யாகி.
– ஷாலினி நியூட்டன்

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்