வடபாதி கிராமத்தில் நிலத்தை வளமாக மாற்ற பசுமாட்டு கிடை அமைப்பு

*12 ஏக்கரில் விவசாயி அசத்தல்

திருத்துறைப்பூண்டி : வடபாதி கிராமத்தில் நிலத்தை வளமாக மாற்ற ஒவ்வொரு ஆண்டும் 12 ஏக்கரில் பசுமாட்டு கிடை அமைத்து விவசாயி அசத்தி வருகிறார்.திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் கோவி சேகர். இவர் ஓய்வு பெற்ற விஏஓ. தற்போது மதிமுக மாவட்ட பொருளாளராக உள்ளார். மேலும் இவருக்கு சொந்தமான 12 ஏக்கரில் தீவிரமாக சாகுபடி செய்யும் விவசாயி ஆவார்,இது குறித்து கோவி சேகர் கூறியதாவது, சொந்தமான நிலத்தில் அழகான குளம் வெட்டி, குளத்தை சுற்றி தென்னை மரங்கள், செம்மரங்கள், தேக்கு, குமுளி தேக்கு வேங்கை, மகாகனி, வேம்பு போன்ற நூற்றுக்கணக்கான மரங்கள் அடங்கிய ஒரு சிறிய தோப்பு உருவாக்கியுள்ளேன்.

இது மட்டுமல்ல வீட்டின் பின்பக்கத்தில் சந்தன மரம், செம்மரம் வேங்கை, தேக்கு மரங்களை வைத்துள்ளேன். குமுளி தேக்கு விரைவில் வருமானம் தரக்கூடியது. ஒரு மரம் கஜா புயலில் வீழ்ந்து விட்டது. அதனை அறுத்து கட்டில் செய்து உபயோகித்து வருகிறேன். அந்த கட்டிலில் படுக்கும் போது என்னையும் அறியாத மன நிம்மதியும் மகிழ்வும் கிடைக்கும்.

மூன்று கி.மீ.சுற்றளவுக்கு இது போன்று கிடையாது. சிறு வயதில் இருந்தே மரம் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் எனக்கு உண்டு. எனது நிலத்தை வளமாக மாற்றிட தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பசுமாட்டு கிடை வைத்து வருகிறேன், விவசாயத்திற்க்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டால் தான் விவசாயத்தை வெற்றிகரமாக செயலாக்க முடியும்.இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு ஆடு துறை 51 (155-160 நாள் வயது) மற்றும் நடுத்தர வயது உடைய ஆடுதுறை 54 (வயது 135 நாள்) ஆகியன தேர்வு செய்து உள்ளேன். சாப்பாட்டிற்கு ஆடு துறை 52 (வயது 145 நாள்) தேர்வு செய்து வைத்துள்ளேன் என்றார்.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி