கிராமத்துக் கீரைகள்!

சிறு கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை என சில வகை கீரைகள் கிராமம், நகரம் என பல பகுதிகளில் விற்பனை ஆகின்றன. ஆனால் கிராமங்களில் பல வகையான கீரைகள் விளைந்தபடி இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் சத்து மிகுந்ததாகவும், சுவையில் தனித்தன்மை மிகுந்தவையாகவும் உள்ளன. தமிழக கிராமங்களில் விளையும் சுமார் 50 வகையான கீரைகள் குறித்தும், அவற்றின் பயன்பாடு குறித்தும் வாரம்தோறும் விளக்க இருக்கிறார் நாட்டுப்புற ஆய்வாளர் முனைவர் ரத்தின புகழேந்தி. முதல்கட்டமாக 5 கீரைகள் குறித்து அறிமுகம் தருகிறார். கீரைகள் எளிதில் கிடைக்கக்கூடிய சத்துகள் நிறைந்த உணவு என்றாலும் மக்களால் கீரை, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் உண்ணும் உணவு என்று எண்ணப்படுகிறது. கீரையை அலட்சியப்படுத்துகின்ற போக்கு பொருளாதார நிலையில் சற்று உயர்ந்திருப்பவர்களிடம் காணப்படுகிறது.‘கீரையில்லா அன்னம் கூரையில்லா வீடு’ என்றொரு பழமொழி உண்டு. கீரை வகைகளில் பல உணவாகப் பயன்படுவதோடு, மருந்தாகவும் பயன்படுகின்றன. அலோபதி மருத்துவ முறைகளின் கேடுகளை உணர்ந்தவர்கள் நமது மரபுவழி மருத்துவ முறையான சித்த மருத்துவத்தை நாடத் தொடங்கி இருக்கிறார்கள். சித்த மருத்துவ முறையே மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அதுவே கீரைகளின் மகத்துவத்திற்கு நற்சான்றாகும்.

*அகத்திக்கீரை

அகத்திக்கீரையை பல்வேறு வகையாகச் சமைத்து உண்ணுகின்றனர். இதனைக் குழம்பாகச் செய்தும், துவட்டியும், தண்ணிச்சாறு வைத்தும் உண்ணுகின்றனர். இக்கீரை சாவுச்சடங்கோடு தொடர்புடையது என்பதால் வீடுகளில் வளர்க்கப்படுவதில்லை. வயல்வெளிகளிலும் வெற்றிலைக் கொடிக்கால்களிலும் இது பயிரிடப்படுகிறது. ஏகாதசி விரதத்தின்போது இக்கீரையைப் பயன்படுத்துகின்றனர். இது வயிற்றிலுள்ள புண்களை நீக்கும் என நம்புகின்றனர். உடற்சூட்டைத் தணிக்கும் என்பதால்தான் விரதம் முடிந்து இக்கீரையை உண்பதாகச் சிலர் தெரிவித்தனர்.இக்கீரையின் மருத்துவக் குணங்கள் பற்றி பல ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். இக்கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்டால் வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். வயிற்றுப்புண் நீங்கும். அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் குடித்து வர சுரம், தாகம், கைகால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க் கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச் சுரம் ஆகியவை தீரும்.

*அரைக்கீரை

ஒரு சிலர் தங்கள் வீட்டுத் தோட்டங்களிலும், சிலர் வயலில் ஊடு பயிராகவும் இக்கீரையைப் பயிரிடுகிறார்கள். இதனைக் கடைந்தும் உண்ணுகிறார்கள். ஒரு சிலர் புளி ஊற்றிக் கடைகின்றனர். சிலர் பூண்டு சேர்த்துக் கடைகின்றனர், சிலர் பருப்பு சேர்த்துக் கடைகின்றனர். பூண்டு, பருப்பு சேர்த்துக் கடைந்து உண்பதே உடல் நலத்திற்கு ஏற்றது என உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அறுகீரையே அரைக்கீரை என்று வழங்கப்படுகிறது. இக்கீரை உடலுக்குக் குளிர்ச்சி, மலச்சிக்கலைத் தீர்க்கும் என மக்கள் நம்புகின்றனர். இக்கீரைக்குக் காய்ச்சலைப் போக்குதல், கோழை அகற்றுதல், மலமிளக்குதல், காமம் பெருக்குதல் ஆகிய குணங்கள் உண்டு. அரைக் கீரையை நெய் சேர்த்து சமைத்து உண்டு வர நீர்க்கோவை, சளிக்காய்ச்சல்,
விஷஜுரம், டைபாய்டு ஆகியவை தீரும்.

*ஆராகீரை

இதனை ஒரு சிலரே சமைத்து உண்ணுகின்றனர். சர்க்கரை நோயுடைய சிலர் இதனைப் பச்சையாக உண்ணுகின்றனர். இது இயற்கையாக வயல், வாய்க்கால்களில் வளர்ந்திருக்கும். சந்தைகளில் விற்பனைக்கும் வருகிறது. இது வெப்பம் நீக்கித் தாகம் தணிக்கும் தன்மையுடையது. கீரையைச் சமைத்துண்ண தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும். இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து பாலில் இட்டு பனங்கற்கண்டும் சேர்த்துக் குடித்தால் சிறுநீரில் இரத்தம் வருவது நிற்கும்.

*எலிக்காது கீரை

இது இதய வடிவம் போல இலைகளைக் கொண்டிருக்கும் கொடி வகையைச் சார்ந்த கீரையாகும். இது பெரும்பாலும் வயல்வெளிகளில் களையோடு சேர்ந்து வளரும். தரிசு நிலங்களிலும் வளரும். களை வெட்டும்போது இக்கீரையைக் கலப்புக் கீரைகளுடன் ஆய்ந்து வந்து சமைப்பர். இக்கீரையை மட்டும் தனியாகத் துவட்டியும் உண்பர்.இது சிறுநீரைப் பெருக்கித் தாதுக் கொதிப்பைத் தணிக்கும் குணமுடையது. இதனைத் தண்ணிச்சாறு வைத்துக் குடிக்க நீரிழிவு, நீர்க்கடுப்பு வலி ஆகியவை தீரும்.

*கண்டங்கத்திரி

இது முள் நிறைந்த கீரைகளையுடைய செடி வகையாகும். பெரும்பாலும் தரிசு நிலங்களில் அதிகம் காணப்படும். இதனை ஒரு சிலரே சமைத்து உண்ணுகிறார்கள். கீரையிலுள்ள முட்களை நீக்கிக் குழம்பு வைத்து உண்பர். இதனுடைய இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயன்கள் நிரம்பியவை. கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படும். இதுபோல் பலகீரைகளை கிராமத்து மக்கள் தங்கள் அன்றாட உணவில் பயன்படுத்துகிறார்கள். 50 வகையான கீரைகளை இந்த மக்கள் பயன்படுத்துகின்றனர்.

– இரத்தின புகழேந்தி

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது