கிராமத்துக் கீரைகள்!

முடக்கத்தான்

வேலிகளிலும் முட்புதர்களிலும் தானே வளர்ந்து படர்ந்திருக்கும்மெல்லிய இலைகளை உடையது. தோசை மாவுடன் இவ்விலையை அரைத்து தோசை செய்து உண்பது வழக்கம். இது மூட்டுவலி உடல்வலி ஆகியவற்றைக் குணப்படுத்தும். இலையை வதக்கி காலில் கட்டினால். காலிலுள்ள வாதப்பிடிப்பு வீக்கம் ஆகியவை தீரும். முடக்கு அற்றான் என்பதே முடக்கத்தான் என மருவி வழங்குகிறது.

முருங்கை

அனைவராலும் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு கீரை வகையாகும். பெரும்பாலும் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்கின்றனர். ஒரு முருங்கை மரமும், எருமை மாடும் இருந்தால் பஞ்சத்தை ஓட்டிவிடலாம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. முருங்கைக் கீரை மட்டுமல்ல. பூ, காய், பிசின், பட்டை என அனைத்துமே மருத்துவக் குணமுடையவை. காய்கறிகள், இல்லாத நேரங்களில் முருங்கைக் கீரையே குழம்புக்கு உதவு கிறது. பருப்புடன் சேர்த்து கூட்டு வைத்தும், குழம்பு வைத்தும் உண்ணுகின்றனர். துவட்டியும் உண்பர். இதன் இலை மலமிளக்கும், ஈர்க்கு சிறுநீர் பெருக்கும், பூ காமம் பெருக்கும், இலைப் பொரியலில்நெய்யுடன் உணவுக்கு முன் 40 நாள்கள் சாப்பிட வாலிப மிடுக்கும் வீரியமும் உண்டாகும். பூவைப் பாலில் காய்ச்சி இரவில் சாப்பிட ஆண்மை பெருகும். காயை அளவுடன் சாப்பிட மார்புச்சளி கபம் தீரும்.

முள்ளங்கிக்கீரை

இது சமைத்து உண்ணக்கூடிய முள்ளங்கிக் கிழங்கில் உள்ள கீரை இல்லை. மழை நாட்களில் சாலை ஓரங்களிலும், வயல்களில் களையாகவும் வளரக்கூடிய முள்செடியாகும். இலை ஈட்டி வடிவில் சிறிதாய் இருக்கும். தண்டு செந்நிறமாகவும் முட்களுடனும் காணப்படும். இதன் கீரையை கலப்புக் கீரையில் சிறிது கலந்து துவட்டி உண்ணுகின்றனர்.

முளைக்கீரை

இக்கீரை சமைப்பதற்கென்று பயிரிடப்படுவதாகும். வீட்டுத் தோட்டங்களில் சிலர் பயிரிடுகின்றனர். சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது. இதனைக் கூட்டு வைத்தும், துவட்டியும் பருப்புடன் கடைந்தும், பூண்டு சேர்த்துக் கடைந்தும் உண்ணுகின்றனர். இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும், மலத்தை இளக்கும் என்று நம்புகின்றனர்.

முன்னக் கீரை

விளிம்புகளில் பற்கள் போன்ற அமைப்புடைய இலைகளைக் கொண்ட சிறு செடி வகையைச் சார்ந்ததாகும். புதர்களில் காணப்படும். பருப்புடன் சேர்த்துக் கூட்டுச் செய்து உண்ணுகின்றனர். மக்கள் இதனை மின்னக் கீரை என அழைப்பர். இலையும் வேரும் மருத்துவப் பயனுடையவை. நோய் நீக்கி உடல் தேற்றவும், பசி மிகுதிப்படுத்தவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

மூக்கிரட்டை

வட்ட வடிவ இலைகளை உடையது. இலையின் கீழ்ப்பகுதி வெளுத்துக் காணப்படும் தரையோடு படர்ந்திருக்கும் சிறு கொடி. சாட்டரணை, மூக்கரைச் சாரணை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது. பிற கீரைகளுடன் சேர்த்துத் துவட்டி உண்ணலாம். கடைந்தும், துவையலாகச் செய்தும் உண்ணுகின்றனர். இதன் இலையும், வேரும் மருத்துவப் பயனுடையவை. இக்கீரையைப் பொரியல், துவையலாக வாரம் இரு முறை சாப்பிட்டு வர, காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம். கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வர, பொலிவும் இளமையும் வசீகரமும் உண்டாகும்.

வல்லாரை

விளிம்புகளில் பற்கள் போன்ற அமைப்புடன் கூடிய வட்ட வடிவ இலை. கணுக்களில் வேர்விட்டுத் தரையோடு படரும் சிறு செடி. ஈரம் மிகுந்த இடங்களில் நன்கு வளரும்.வயல்வெளி வாய்க்கால் பகுதிகளிலும் வளரும். சந்தையில் விற்பனைக்கும் வருவதுண்டு. இதன் பயனறிந்தவர் பச்சையாகவே உண்ணுகின்றனர். சாம்பார் வைத்தும், துவையலாகவும் உண்ணுகின்றனர். மாத்திரை களாகவும், சாக்குலேட்களாகவும் கடைகளில் விற்கின்றனர்நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், வியர்வைப் பெருக்கியாகவும், செயல்படும். இதனைத் துவையல் செய்து உண்டால் நினைவாற்றல் வளரும். இலையை உலர்த்தி பொடித்து காலை, மாலை நெய்யில் உட்கொள்ள வாதம், வாயு தீரும். மூளைப் பலத்தையும், சுறுசுறுப்பையும், சிந்தனைத் திறனையும் தரும். வல்லாரை இலை, தூதுவளை சம அளவு கசக்கிய சாறு ஐந்து துளி அல்லது இரண்டின் பொடி ஒரு தேக்கரண்டி 50 மி.லி. காய்ச்சிய பாலில் கொடுத்துவர, தொண்டைக் கம்மல், சுவாச உறுப்புகளில் சளித் தேக்கம் நீங்கும். இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்ட நாள் கட்டி வர யானைக்கால், விரைவாதம்,நெறிக்கட்டி தீரும். கீழாநெல்லி, வல்லாரை சம அளவு அரைத்து சுண்டைக்காய் அளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வழுக்கை

சாறுள்ள மிகச் சிறு இலைகளைக் கொண்ட மிகக் குறுஞ்செடி. நீர் வளமுள்ள இடங்களில் தானே வளர்கிறது. பிற கீரைகளுடன் கலந்து துவட்டி உண்ணுகின்றனர். கடைந்தும் உண்ணுவர். இதுவும் மருத்துவப் பயனுடைய கீரை. சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல், காமம் பெருக்குதல் ஆகிய குணங்களையுடையது. செடி முழுவதையும் அரைத்து எலுமிச்சையளவு 200 மி.லி. பசும்பாலில் கலந்து வடிகட்டி காலையில் மட்டும் பருகிவரச் சூலை, வெட்டை முதலியவை நீங்கும். இலையை அரைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும். இலையை வேகவைத்து அரைத்து மார்பில் கட்டிவரச் சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும்.– இரத்தின புகழேந்தி

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு