கிராமத்துக் கீரைகள்!

தும்பைக் கீரை

கூரான, சற்று நீண்ட கரும்பச்சை நிற இலைகளையுடைய சிறு செடி, வெண்மை நிறப் பூக்களை உடையது. தூய வெண்மைக்குத் தும்பைப் பூவை உதாரணம் காட்டுவது நாட்டுப்புற மரபு. இக்கீரையைத் தனியாக உண்ணும் வழக்கம் இல்லை. பிற கீரைகளுடன் கலப்புக் கீரையாகவே பயன்படுத்துவர். இதுவீட்டுத் தோட்டங்களிலும், வயல்களிலும் தானே வளரும். பாம்பு தீண்டியவர்களுக்குத் தும்பைச் சாறு 25 மி.லி. கொடுக்க 2, 3 தடவை பேதியாகும், கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப் பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாது சாப்பிட வேண்டும். ஒரு நாள் உறங்கக் கூடாது. மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் கொடுத்தால் தீரும். தும்பைச்சாறு 1 மி.லி. தேனில் கலந்து கொடுத்துக் கொட்டுவாயில் இலையை அரைத்துக் கட்டினால் தேள் நஞ்சு இறங்கும். கடுப்பு நீங்கும்.

தூதுவேளை

முட்களை உடைய இலைகளையும், தண்டையும் உடைய கொடி வகை. வேலிகளில் படர்ந்து காணப்படும். இதன் மருத்துவ குணங்களுக்காகவே இதை விரும்பி உண்ணுகின்றனர். இதனை வதக்கியும், துவையல் செய்தும், குழம்பு வைத்தும் உண்ணுகின்றனர்.. இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாகவோ, கடைந்தோ சாப்பிட கபக்கட்டு நீங்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும். இலைச்சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம், மார்புச்சளி நீங்கும். காயை உலர்த்தித் தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டு வர இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை தீரும். இலை, பூ, காயுடன் கூடிய செடியை வேருடன் அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை, மாலைபருகிவர சுவாசச் சளி, இருமல் ஆகியவை தீரும்.

தொசிலிக் கீரை

நரம்பு போன்ற தண்டினையும்வட்டவடிவமான (வில்லை போன்ற) இலைகளையும் கொண்ட தரையோடு படரும் சிறு கொடியினத்தைச் சார்ந்தது. கீரையின் மேல் பகுதி பச்சையாகவும் கீழ்ப்பகுதித் துளிர் நிறத்திலும் காணப்படும்இதனைப் புளியூற்றிக் கடைந்து உண்ணலாம். தொசிலிக் கீரையை, துயிலிக்கீரை எனக் குறிப்பிடும் பதார்த்த குணபாடம்.

தொட்டால் சிணுங்கி

குளக் கரைகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் தானே வளரும். தடிப்பான தண்டினையும் சிறுசிறு இலைகளையும் கொண்ட செடி. ஆடு மாடுகளுக்குப் பாலை அதிகரிக்கச் செய்வதற்காக இச்செடியைத் தின்னச் செய்வார்கள். மனிதர்கள் உண்பதற்காகத் தனியே சமைக்கும் வழக்கம் இல்லை. கலப்புக் கீரையில் மற்ற கீரைகளுடன் சேர்த்துத் துவட்டி உண்பதுண்டு.சிறுநீரகத்தில் தோன்றும் கல்லைக் கரைக்க இம்மூலிகை, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேரைக் கஷாயம் செய்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். மூட்டுவாதம், விரைவாதம் போன்றவற்றிற்கு இலையை அரைத்துப் போட்டால் வீக்கம் குறையும். இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மாத்திரைகளில் மேற்பூச்சுக்குப் பயன்படுகிறது.

நாவரிஞ்சி

வட்டவடிவிலான இலைகளையும், நீண்ட கதிர்களையும் உடைய செடி. தெரு ஓரங்களிலும் வயல், வரப்பு என எங்கும் வளரும். இக்கீரையையும் தனியாகச் சமைத்து உண்பதில்லை. கலப்புக் கீரையில் பிற கீரைகளுடன் பயன்படுத்துகின்றனர். இதன் எல்லா பாகங்களும் மருத்துவப் பயனுடையவை. சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல்தேற்றுதல், சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ குணங்களாகும். இக்கீரையை அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து காலை, மாலை பத்து நாள் கொடுக்க ரத்த மூலம் தீரும். இலைச்சாற்றைத் தடவி வர தேமல், படை முதலியவை குணமாகும். இலையை கசக்கித் தேய்க்க தேள் விஷம் இறங்கும். இதன் விதையை 10 கிராம் எடுத்து அரைத்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட பேதி தீரும். துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்த்துண்ண மூலம் அனைத்தும் தீரும். இதன் வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும்.

நெருஞ்சி

சிறுசிறு இலைகளை உடையதும் முட்களாலான காய்களை உடையதுமான தரையோடு படரும் செடி. இதனைத் தனியே சமைப்பதில்லை. கலப்புக் கீரையில் பிற கீரைகளுடன் கலந்து துவட்டி உண்பதுண்டு. இரண்டுநெருஞ்சில் செடியும் ஒரு கைப்பிடி அறுகும் ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு ஐம்பது மி.லி மூன்றுவேளை, மூன்று நாள் கொடுக்கக் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், நீர்ச்சுளுக்கு ஆகியவைத் தீரும். செடியை வேருடன் சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து மோர் அல்லது பாலுடன் உட் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.

– இரத்தின புகழேந்தி

 

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா