கிராமத்துக் கீரைகள்!

சிறு கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை என சில வகை கீரைகள் கிராமம், நகரம் என பல பகுதிகளில் விற்பனை ஆகின்றன. ஆனால் கிராமங்களில் பல வகையான கீரைகள் விளைகின்றன. அவை ஒவ்வொன்றும் சத்து மிகுந்ததாகவும், சுவையில் தனித்தன்மை மிகுந்தவையாகவும் உள்ளன. தமிழகக் கிராமங்களில் விளையும் சுமார் 50 வகையான கீரைகள் குறித்தும், அவற்றின் பயன்பாடு குறித்தும் வாரம்தோறும் விளக்குகிறார்.

கரிசலாங்கண்ணி

வெள்ளைநிற மலர்களையுடைய குறுஞ்செடியினம் இது. இதனைப் பெரும்பாலானோர் தலையில் தேய்த்துக் குளிக்கவும், அடையாகத் தட்டி உலர்தி தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயைத் தலையில் தடவிக் கொள்ளவுமே பயன்படுத்துகின்றனர். இதனுடைய மருத்துவக் குணத்தைத் தெரிந்து கொண்ட ஒருசிலர் மட்டுமே சமைத்து உண்ணுகின்றனர். இதனைச் சாம்பார் வைத்து உண்ணுகின்றனர். மஞ்சள் காமாலை உடையவர்களுக்குக் கீழாநெல்லியுடன் இதனையும் சேர்த்து அரைத்து மோருடன் உணவாகக் கொடுக்கின்றனர். மேலும் இந்தக் கரிசலாங்கண்ணி பித்தநீர்ப் பெருக்கியாகவும், மலமகற்றியாகவும் செயல்படும். கரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 6, துளசி இலை 5, 1 சிறு கீழாநெல்லிச்செடி ஆகியவற்றைக் கழுவி காலை, மாலை வெறும் வயிற்றில் மென்று தின்ன கல்லீரல், மண்ணீரல் நோய்கள், பித்தநீர் சுரப்பின்மை, இரத்தத்தில் மிகு பித்தம், இரத்த சோகை ஆகியவை தீரும். பத்து கிராம் கரிசலாங்கண்ணி இலையுடன் 2 கிராம் மிளகு சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து மோரில் கலக்கி காலை, மாலைச் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, சோகை முதலிய நோய்கள் தீரும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

கறிபசலை

இக்கீரை வயல்வெளிகளில் களைகளுடன் வளர்ந்து கிடக்கும். தரிசு நிலங்களிலும் வளரும் தன்மையுடையது. இதனை ஒருசிலர் சாம்பார் வைத்து உண்ணுகின்றனர். வேறு சிலர் புளி ஊற்றிக் கடைந்து உண்ணுகின்றனர். இன்னும் சிலர் துவட்டி உண்ணுகின்றனர். இக்கீரை உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் தன்மையுடையது.

கானாங்கழுத்தை

வயல் வரப்புகளிலும், வாய்க்கால்களிலும், கரும்பு வயல்களிலும் இந்தக் கீரை மிகுதியாகக் காணப்படும். பசுங்கன்றுகளுக்கு அதிகம் கொடுப்பதுண்டு. ஒரு சிலர் சமைத்து உண்பர். பிற கீரைகளுடன் கலந்து துவட்டி உண்ணுகின்றனர். பருப்புக் கலந்து கூட்டு செய்தும் உண்ணுகின்றனர். இச்செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. சுரம், ரத்தபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தும். இலையுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்து அரைத்து தயிரில் நெல்லிக்காய் அளவு கொடுக்க வெள்ளைப் போக்கு தீரும். இலையைக் கசக்கி முகப்பருவிற்கு வைக்க விரைவில் குணமடையும்.

குப்பைமேனி

இது குறுஞ்செடி வகையைச் சார்ந்ததாகும். பிற கீரைகளுடன் கலந்து கலப்புக் கீரையாகத் துவட்டி உண்ணப்படுகிறது. இச்செடி முழுமையும் மருத்துவப் பயன் உடையது. இலை கோழை அகற்றியாகவும், வேர் மலமிளக்கியாகவும் செயல் படும். இதன் வேரைச் சூரணம் செய்து கொடுக்க, சிறுவர்களுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.

குறிஞ்சா

இது ஊரின் புறத்தேயுள்ள வேலிகளிலும், முட்புதர்களிலும், வயல்வெளிகளின் வேலிப்பகுதிகளிலும் காணப்படுகிறது. கொடி வகையைச் சார்ந்தது. அதிசய குறிஞ்சா வேலியில படந்தா என்ற பழமொழி ஒன்று இதனைக் குறிக்கிறது. இது சிறு குறிஞ்சா என்றும் வழங்கப்படுகிறது. இதுவும் பிற கீரை வகைகளுடன் கலப்புக்கீரையாகத் துவட்டி உண்ணப்படுகிறது. இந்தக் கீரையும் மருத்துவப் பயன்கள் நிரம்பியது. சர்க்கரை நோய் உடையவர்கள் இந்த இலையைப் பச்சையாகவே உண்பார்கள். இதனுடன் களா இலையையும் அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க, தாமதித்து வரும் மாதவிடாய், உதிரச் சிக்கல் தீரும். இலை ஒரு பங்கும், இரண்டு பங்கு தென்னம்பூவும் மையாய் அரைத்து பட்டாணி அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி காலை, மாலை ஒரு மாத்திரை வெந் நீரில் விழுங்க சிறுநீர்ச் சர்க்கரை தீரும்.

கொமுட்டிக் கீரை

இது ஆற்றுப்படுகைகளிலும் மணற்பாங்கான நிலங்களிலும் வளரும். கொம்மட்டி என்பதே கொமுட்டி என அழைக்கப்படுகிறது. கொடி வகையைச் சார்ந்தது. இக்கொடியின் கொழுந்தைக் கிள்ளி பிற கீரைகளுடன் கலப்புக்கீரையாக உண்பர். ஒரு சிலர் மட்டுமே இவற்றை உண்ணுகின்றனர்.

கோவைக் கீரை

புதர்களிலும், வேலிகளிலும் தானே வளரும் கொடி வகையாகும். இத்தழையை ஆட்டுக்குத் தீவனமாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இதன் மருத்துவக் குணம் தெரிந்தவர்கள் சமைத்து உண்ணுகின்றனர். இதனைத் துவட்டி உண்பார்கள். பருப்புடன் சமைத்தும் உண்ணுகின்றனர். இது சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மிகுதிப்படுத்தும் குணமுடையது. ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சிக் காலை, மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறி, சிரங்கு, புண் ஆகியவை போகும். கோவைக் கீரையைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

– இரத்தின புகழேந்தி

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு