தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகம் நிறுத்தம்விலை நிர்ணயம் செய்யக்கோரி 8 கிராம விவசாயிகள் உண்ணாவிரதம்

மஞ்சூர் : பிக்கட்டியில் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.35 விலை நிர்ணயம் செய்யக்கோரி கூட்டுறவு, தனியார் தொழிற்சாலைகளுக்கு தேயிலை விநியோகத்தை நிறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர தோட்டத்தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேயிலை விவசாயத்தை நம்பியுள்ளனர். இந்நிலையில் தேயிலை விவசாயத்தில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி காரணமாக கடந்த 30ஆண்டுக்கும் மேலாக பொருளாதார ரீதியாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுகளை நடைமுறை படுத்த வேண்டும், மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் வாழ்வாதாரம் கருதி பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.35 நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகுட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.35 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிக்கட்டி பஜாரில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு குந்தை சீமை சின்னகனி கவுடரும், 14 ஊர் தலைவருமான போஜாகவுடர் தலைமை தாங்கினார். ஊர்தலைவர்கள் ராதாகிருஷ்ணன்(பிக்கட்டி), ஜெயகுமார்(ஒசையட்டி), அர்ஜூணன்(கெரப்பாடு), தங்கராசு(சிவசக்தி), சந்திரன்(குந்தாகோத்தகிரி), ரங்கராஜன், கர்ணன்(பாரதியார்புதுார்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பின்படி பசுந்தேயிலைக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.35 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து 3நாட்கள் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு பிக்கட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறிப்பதை தவிர்த்ததுடன் தங்கது கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கில் இன்று(நேற்று) முதல் பிக்கட்டி பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற் சாலைகளுக்கு 3நாட்களுக்கு பசுந்தேயிலை விநியோகிப்பதில்லை என தெரிவித்தனர்.

போராட்டத்தில் பிக்கட்டி சுற்றுவட்டார 8 கிராமங்களை சேர்ந்த தேயிலை விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.ஊட்டி:நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக தேயிலை விவசாயம் உள்ளது.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காத நிலையில்,விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.உரிய விலை வழங்க கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் நாக்குபெட்டா படுகர் நலச்சங்கம் சார்பில் நாள் தோறும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ஊட்டி அருகேயுள்ள எப்பநாடு பகுதியில் விவசாயிகள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நாக்கு சீமை நலச்சங்க தலைவர் பாபு தலைமை வகித்தார்.எப்பநாடு ஊர் தலைவர் அப்பாஜி, பெள்ளிகவுடர்,தேசிங்கு, பசுவன், பீமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றம் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்ககோரி வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டும். பசுந்தேயிலை கிலோ ஒன்றிற்கு ரூ.35 வழங்கிட வேண்டும். தேயிலை சட்டத்தின் 30வது பிரிவை அனைத்து தரப்பிருக்கும் நடைமுடைறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கிராம செயலாளர் ராமன், தொதநாடு சிமை நலச்சங்க செயலாளர் குண்டன், துணைத் தலைவர் ராமசந்திரன், பொருளாளர் பெள்ளிகவுடர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக ஆதரவு

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் மேக்குநாடு,தொதநாடு,பொரங்காடு சீமைகளில் தினம் தினம் இரண்டு ஊர்கள் ஒன்றாக சேர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கோத்தகிரி அருகேயுள்ள நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நலச்சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.இதில் சிறப்புரையாற்றிய கப்பச்சி வினோத் விரைவில் உங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தலையிட்டு பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரத போராட்த்தில் முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு,பால நந்தகுமார்,சக்கத்தா சுரேஷ், நஞ்சு,கோத்தகிரி வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணி துணைத்தலைவர் குயில்அரசன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நேற்றைய உண்ணாவிரதத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!