விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றி அவதூறுகள் பரப்பி, சதி செய்ய நினைத்த வீணர்களுக்கு விடையளித்த மக்கள்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கி இன்று வரை தொடரும் சமூகநீதித் திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்கள்-இவற்றுக்கு நற்சான்றிதழ் அளித்து விக்கிரவாண்டி தேர்தலில் திமுகவிற்கு மகத்தான வெற்றியை வழங்கி, அவதூறுகள் பரப்பி-சதி செய்ய நினைத்த வீணர்களுக்கு மக்கள் விடையளித்திருக்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். திமுக வேட்பாளருக்கு மக்கள் அளித்த வாக்குகள் 1,24,053. தனக்கு அடுத்தபடியாக வந்த பாமக வேட்பாளரை 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் கட்டுத்தொகையை இழந்திருக்கிறார்கள். திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திமுக தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனான நான் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடாமல் அதிமுக ஒதுங்கி நின்று, தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.

திமுக வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது. விக்கிரவாண்டியில் உள்ள 2 லட்சத்து 34ஆயிரத்து 653 வாக்காளர்களையும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, அந்தத் திட்டங்களின் பயன்களை நேரடியாகப் பெற்றுள்ள மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்கள். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, தமது எழுச்சிமிகு பரப்புரையில், விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்படவிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்கிற பிரிவை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி, அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கிய தலைவர் கலைஞரின் சமூகநீதிக் கொள்கையால் தலைமுறைகள் கடந்து அடைந்துள்ள முன்னேற்றத்தை அவர்கள் மறக்கவில்லை என்பதைத்தான் விக்கிரவாண்டி மக்கள் தந்துள்ள மகத்தான வெற்றி எடுத்துக் காட்டுகிறது.

பட்டியல் இனச் சமுதாயத்திற்கு 18% இடஒதுக்கீடு வழங்கியதுடன், அவர்களின் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை வழங்கிய தலைவர் கலைஞரின் வழியில், கடந்த மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் அவர்களை அழைத்துச் செல்கிறது. இடைத்தேர்தல் பரப்புரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இதனைச் சிறப்பாக எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்து வெற்றிக்குத் துணை நின்றார்.

அரசுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சதிகள், சாதி-மத வன்முறையைத் தூண்டுவதற்கான வேலைகள், கலைஞர் மீதும் திமுகவின் மீதும் வைக்கப்பட்ட மலிவான-மட்டமான அவதூறுகள், திமுகவுக்கு எதிராகக் களத்தில் நின்றவர்களும்-நிற்பதற்குப் பயந்தவர்களும் உருவாக்கிக் கொண்ட ரகசிய ஒப்பந்தங்கள்-இவை எல்லாவற்றையும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் முறியடித்து, திமுக வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை வழங்கியிருக்கிறார்கள் என்பதுதான் திமுக நிர்வாகிகளிடமும் தோழமைக் கட்சியினரிடமும் வெளிப்படுகின்ற மகிழ்ச்சிக்கான காரணம்.

இன்னும் பல திட்டங்கள் தொடரும். அதில் விக்கிரவாண்டி தொகுதியும் பயன்பெறும். கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கி இன்று வரை தொடரும் சமூகநீதித் திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்கள்-இவற்றுக்கு நற்சான்றிதழ் அளித்து திமுகவிற்கு மகத்தான வெற்றியை வழங்கி, அவதூறுகள் பரப்பி – சதி செய்ய நினைத்த வீணர்களுக்கு விடையளித்திருக்கிறார்கள், விக்கிரவாண்டி வாக்காளர்கள். இந்த வெற்றியைத் கலைஞருக்கு காணிக்கையாக்கி, மக்களுக்குத் தொண்டாற்றும் நம் பணியைத் தொடர்ந்திடுவோம்.

தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியுடன், நாடு தழுவிய அளவில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அடுத்தடுத்த தேர்தல் களங்களுக்கு ஆயத்தமாவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கான சிந்தனைகளுடனும் அதனைச் செயல்படுத்தும் வலிமையுடனும் பயணிப்போம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

* திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது

Related posts

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் பாஜக அரசியல் செய்ய முயற்சித்ததாக ஈ.ஆர்.ஈஸ்வரன் சாடல்

நாடு திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு மேள தாளங்களுடன் சக வீரர்கள் கண்ணிர் மல்க வரவேற்பு

வேறொரு சூழலில், என் விளையாட்டை 2032 வரை தொடர வாய்ப்பு உள்ளது: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உருக்கம்