வெல்ல போவது யார்? கடந்த 10ம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சென்னை: கடந்த 10ம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி வென்றார். இவர் மரணமடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட மொத்தம் 29 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது. கடந்த 10ம் தேதி அமைதியாக நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவானது.

அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இன்று விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகளும், அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் விக்கிரவாண்டியில் வெல்வது யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்குகள் எண்ணும் பணியில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், உட்பட மொத்தம் 150 பேர் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையத்தைச் சற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு. 1,219 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

பேரணாம்பட்டில் நள்ளிரவில் பூத்துக்குலுங்கிய பிரம்ம கமலம் பூ

நாமக்கல் அருகே சேலம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வாகனம்

சென்னையில் மருத்துவக்கட்டிடம் திறந்து வைத்து, மருத்துவ உபகரணங்களை வழங்கி, புதிய மருத்துவக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்