விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக யாரும் செயல்படக்கூடாது: அதிமுகவினருக்கு எடப்பாடி ரகசிய உத்தரவு


சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக யாரும் செயல்படக்கூடாது என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மறைமுகமாக பல்வேறு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் பா.ம.க-வின் உயர்மட்ட குழு கூடி லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பா.ம.க நிர்வாகிகளுடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்த பின், நிருபர்களிடம் பேசிய பா.ம.க மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பா.ஜக வுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பரப்புரையின்போது பாட்டாளி மக்கள் கட்சியினரை வசை பாடினர். பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்காததே அதன் பெரும் தோல்விக்கும் வாக்கு வங்கி சரிவுக்கும் பெரும் காரணமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, பாமக வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான ஓட்டு பெற்றுவிடக்கூடாது என்றும், அதிமுகவினர் யாரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு ஆதரவாக தொகுதியில் மறைமுகமாக செயல்படக்கூடாது என்றும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பாட்டாளி மக்கள் கட்சி அதிக ஓட்டுகளை பெற்றால் 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் பாமக அதிக எண்ணிக்கையிலான தொகுதியினை கேட்க கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், பாமக தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் எப்போதும் தே.மு.தி.க தலைவர் மறைந்த விஜயகாந்தை அவமானப்படுத்தியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளனர். இதனால், தே.மு.தி.க. கட்சியை பொறுத்தவரையில் அக்கட்சி எப்போதும் பாமகவுடன் இணக்கமாக செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் இலவச பேருந்து பயணத்திட்டம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஆகியவை வன்னிய பெண்கள் மத்தியில் மிகுந்த ஆதரவை பெற்றுள்ள திட்டமாக விளங்குகிறது.

இதுதவிர, திமுக கொண்டுவந்துள்ள நலத்திட்டங்களால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிட்ட தொகுதியினை கூட அவர்கள் வெல்ல முடியாமல், திமுகவிடம் தோல்வி கண்டனர். எனவே ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு, அவர்கள் கட்சி சார்ந்த ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். வன்னியர்கள் உட்பட வேறு எந்த சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்காது என்றும் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது கள நிலவரமாகும். இதனால் பெருவாரியான வாக்குகள் பெற்று, திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற உள்ளது என்பது இறுதி செய்யப்பட்ட ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!