விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் (8ம் தேதி) மாலையுடன் முடிவடைவதால் கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை முதல் இரண்டு நாட்கள் திமுக இளைஞரணி அமைப்பாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம்தேதி உடல்நலக்குறைவால் காலாமானார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், இடதுசாரி கட்சித் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர். அதேபோல் பாமக வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து கடந்த 4ம் தேதி தேஜ கூட்டணி சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பாமக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். இதனிடையே திமுக தலைவரும், முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் இறுதி கட்ட பிரசாரத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வீடியோவை வெளியிட்டு தொண்டர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார்.

இடைதேர்தல் வாக்குபதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் நாளை மறுதினம் 8ம் ேததி பிரசாரம் ஓய்கிறது. முதலமைச்சருக்கு பதிலாக திமுக இளைஞரணி அமைப்பாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடைசி 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிரசாரத்தில் விறுவிறுப்பாக இந்தியா கூட்டணி, தேஜ கூட்டணி வேட்பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கிராமம், கிராமமாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் 8ம் தேதி மாலை 5 மணியுடன் இந்த பிரசாரம் ஓய்வதால் அன்று மாலையே வெளியூரில் இருந்து வந்து தங்கி உள்ள அரசியல் கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் மாவட்ட அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து 10ம் தேதி வாக்குப்பதிவும் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்