அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை; விஜயதரணியை ஓரங்கட்டிய பாஜ: இருந்த எம்எல்ஏ பதவியும் போச்சு… பட்டை நாமத்துடன் வைரலாகும் புகைப்படம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். இதனால் இந்த தொகுதிக்கு ஏப்.19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கன்னியாகுமரி எம்பியாக இருந்த வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்ததால், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி எம்.பி.யாக போட்டியிட சீட் கேட்டு போராடினார். அப்போதே வாய்ப்பு மறுக்கப்பட்டதால், விஜயதரணி பா.ஜனதாவில் சேர இருப்பதாக ஒரு தகவல் பரவியது. அவரை காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தியது.

2021 சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்ற விஜயதரணிக்கு சட்டசபை கொறடா பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவரோ சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டும் என்று அடம் பிடித்தார். ஆனால் அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில், மக்களவை தேர்தல் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விஜயதரணி தலைமைக்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. திடீரென காங்கிரசில் இருந்து விலகி ஒன்றிய அமைச்சர் முருகன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனை காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ெகாண்டாடினர்.

எம்.பி சீட்டை குறி வைத்தே அவர், பா.ஜனதாவில் சேர்ந்துள்ளதாக கூறப்பட்டது. பா.ஜனதா தரப்பிலும், படித்த பெண் ஒருவருக்குதான், குமரி தொகுதி எனக் கூறப்பட்டது. மேலும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சீட் வழங்க மாநில தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில், விஜயதரணிக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் குமரியில் விஜயதரணி பா.ஜனதா சார்பில் போட்டி என தகவல் பரவியது. கட்சி லெட்டர்பேடில் அவரது பெயர் இருப்பது போன்ற அறிக்கையும், சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் கட்சியினர் மத்தியிலும் குழப்பம் நிலவியது. ஆனால், சிறிது நேரத்திலேயே அது போலி என்ற தகவலும் வந்தது.

இந்நிலையில், குமரி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை பா.ஜனதா மேலிடம் அறிவித்தது. இதனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காவது வாய்ப்பு வழங்கப்படும் என்று விஜயதரணி காத்திருந்தார். அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. இந்த தொகுதிக்கு நந்தினி என்ற வேட்பாளரை பாஜ அறிவித்தது. இதனால், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டு, தனது எம்.எல்.ஏ பதவியை விஜயதரணி இழந்துள்ளார் என காங்கிரஸ் கட்சியினரே கிண்டலடித்து வருவதுடன், விஜயதரணி படத்திற்கு பட்டை நாமம் சாற்றியது போல், கிராபிக்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு